ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டும் கடும் விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதை ஏற்க இயலாது என இந்தியா தெரிவித்துள்ளது.
ஜப்பானின் இந்த நடவடிக்கையானது நியாயமற்றது என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சில நாடுகளில் இருந்து ஜப்பானுக்கு வரும் ஒலிம்பிக் வீரர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் விதித்துள்ளனர்.
இதனால் இந்தியா, பாகிஸ்தான், பிரிட்டன் உள்ளிட்ட 11 நாடுகளின் வீரர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ள புதிய விதிமுறைகளின்படி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் தங்கள் நாட்டிலிருந்து ஜப்பானுக்குப் புறப்படும் ஒரு வாரத்திற்கு முன்பே தினமும் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் ஜப்பான் வந்து சேர்ந்த பின்னர் முதல் மூன்று நாட்களுக்கு மற்ற குழுக்களுடன் தொடர்பில் இருக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இத்தகைய விதிமுறைகளால் போட்டியாளர்கள் மூன்று நாட்கள் பயிற்சி மேற்கொள்ள முடியாது என்றும் போட்டிக்குத் தயாராவதில் வீரர்களுக்குப் பின்னடைவு ஏற்படும் என்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம் கூறியுள்ளது.
"போட்டி தொடங்குவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்புதான் வீரர்கள் அனைவரும் விளையாட்டு கிராமத்துக்கு வந்து சேர்வர். இந்நிலையில் மூன்று நாட்கள் அவர்களுக்குப் பயிற்சி இன்றி வீணாகும். இந்த மூன்று நாள் பயிற்சிதான் அவர்களை போட்டிக்கான தயார்நிலையின் உச்சத்துக்குக் கொண்டு செல்லும்.
"ஐந்து ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டிக்காக மிகத் தீவிரமாக உழைத்துள்ளனர் இந்திய தடகள வீரர்கள். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டி தொடங்கும் ஐந்து நாட்களுக்கு முன்பு இவ்வாறு பாகுபாடு காட்டுவது நியாயமற்றது," என இந்திய ஒலிம்பிக் சங்கம் மேலும் கூறியுள்ளது.

