கோல்கத்தா: மேற்கு வங்கத்தில் நிகழ்ந்துவரும் வன்முறைச் சம்பவங்களைத் தடுக்க அம்மாநில அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கோல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் ஏற்படும் அச்சுறுத்தல்களை அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதில் பாஜகவினர் குறிவைத்து தாக்கப்படுவதாக அக்கட்சி புகார் எழுப்பி உள்ளது.
தங்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் அதிகரித்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க தனிக் குழுவை அமைக்க வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு கோல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வன்முறை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, காவல்துறையினர் உரிய வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை நடத்தத் தவறிவிட்டதாகக் கூறியுள்ளது.
"நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மாநில அரசு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதும் மக்களின் நம்பிக்கையை ஊக்குவிப்பதும் அரசின் கடமை.
"உங்கள் விருப்பத்துக்கேற்ப மேற்குவங்கத்தை ஆட்சி செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது," என்று உயர் நீதிமன்ற அமர்வு காட்டத்துடன் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தனிக்குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து முதல்வர் மம்தா தலைமையிலான மேற்கு வங்க அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

