ஹரியானா முதல்வருக்கு கறுப்புக்கொடி காட்டி விவசாயிகள் போராட்டம்
புதுடெல்லி: வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்பதை வலியுறுத்தி ஹரியானாவில் நேற்று முன்தினம் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பன்ச்குழாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கு விவசாயிகள் கறுப்புக்கொடி காட்டினர். முன்னதாக விவசாயிகளைக் கலைந்து போகுமாறு போலிசார் எச்சரித்ததை அடுத்து அவர்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அனைவரும் குண்டுக்கட்டாக அகற்றப்பட்டு போலிஸ் வாகனங்களில் ஏற்றப்பட்டனர். மேலும் அவர்கள் அனைவரும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் அமைதியாகப் போராடிய தங்களை போலிசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர் என விவசாயிகள் சாடியுள்ளனர்.
800 கிலோ மாட்டுச் சாணத்தைக் காணவில்லை என போலிசில் புகார்
ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் 800 கிலோ மாட்டுச் சாணத்தைக் காணவில்லை என போலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் 'கோதான் நியாய போஜனா' என்ற திட்டத்தின் கீழ் ஒரு கிலோ மாட்டுச் சாணம் 2 ரூபாய் என்ற விலையில் மாநில அரசால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஏராளமான கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் கோர்பா மாவட்டத்தில் உள்ள துரனா என்ற கிராமத்தில் 1600 ரூபாய் மதிப்புள்ள 800 கிலோ மாட்டுச் சாணம் களவு போனதாக கிராம மக்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
கடும் பாதுகாப்பை மீறி டெல்லி மெட்ரோ ரயிலுக்குள் புகுந்த குரங்கு
புதுடெல்லி: கடும் பாதுகாப்பையும் மீறி டெல்லி மெட்ரோ ரயிலுக்குள் ஒரு குரங்கு (படம்) உள்ளே புகுந்தது. எனினும் ரயில் பயணிகளுக்கு அதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதுதொடர்பான காணொளிப் பதிவு சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களில் மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்துப் பகுதிகளிலும் தீவிர சோதனைகளும் நடைபெறுகின்றன. இதையும் மீறி அந்தக் குரங்கு எப்படி ரயில் நிலையத்துக்குள் நுழைந்து, பிறகு ரயிலிலும் பயணம் செய்தது என்பது தெரியவில்லை. மெட்ரோ ரயிலில் ஓர் இருக்கையில் அமர்ந்து அந்தக் குரங்கு அமைதியாகப் பயணம் மேற்கொண்டதைப் பார்த்து பயணிகள் வியந்து போயினர். ஏராளமானோர் அக்குரங்கைத் தங்கள் கைபேசியில் படம்பிடித்தனர்.
மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: காஷ்மீரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்களில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி முதாசீர் பண்டிட்டும் ஒருவன் என தெரியவந்துள்ளது. அண்மையில் காஷ்மீரில் ஏழு பேரைப் படுகொலை செய்ததில் இவனுக்கு முக்கிய பங்கிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வடகாஷ்மீர் பகுதியில் தீவிரவாத செயல்பாடுகளை ஒடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காஷ்மீர் காவல்துறை தலைவர் விஜய்குமார் தெரிவித்துள்ளார்.

