புதுடெல்லி: ராமர் கோவில் அறக்கட்டளை மீதான குற்றச்சாட்டுகளை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, ராமபிரான் பெயரில் பாரதிய ஜனதா தலைவர்கள் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார் என 'இந்து தமிழ்' ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில்தான் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை விசாரிப்பது உச்ச நீதிமன்றத்தின் கடமை என்றார்.
ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கான ஒட்டுமொத்த பணப் பரிமாற்றத்தையும் உச்ச நீதிமன்றம் தனது மேற்பார்வையின்கீழ் தணிக்கை செய்யவேண்டும் என வலியுறுத்தி உள்ள ரந்தீப் சுர்ஜேவாலா, தவறு நிகழ்ந்திருந்தால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
"ராமர் கோவில் அறக்கட்டளையை அமைத்தவர் பிரதமர் மோடி. அவருக்கும் இதில் உண்மையைக் கண்டறியும் கடமை இருக்கிறது.
"எனவே இது குறித்து பிரதமர் மோடி உரிய வகையில் விசாரித்து உண்மையை வெளிக்கொணர வேண்டும். இதில் தயக்கம் கூடாது," என ரந்தீப் சுர்ஜேவாலா மேலும் தெரிவித்துள்ளார்.

