கோல்கத்தா: கொரோனா தொற்றுப்பரவல் தடுப்பு நடைமுறைகளைப் பின்பற்றாமல் அலட்சியமாக செயல்பட்டால் அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களில் இரண்டாவது அலையில் ஏற்பட்ட பாதிப்புகளை இந்தியா மீண்டும் சந்திக்க நேரிடும் என எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்துவதில் பிரிட்டனிடம் இருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த இக்கட்டான நேரத்தில் கொரோனா கிருமி மரபணுப் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்றும் புதிய வகை கிருமிகளுக்கு எதிராக தடுப்பூசிகள் எந்த அளவுக்கு பலன் அளிக்கிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
கொரோனா தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்த பிரிட்டன் மாதக் கணக்கில் ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே செல்வதாக குறிப்பிட்டுள்ள அவர், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு ஏதாவது ஒரு புதிய வகை கிருமி கண்டறியப்பட்டால் உடனடியாக ஊரடங்கு அமல் செய்யப்படுகிறது என சுட்டிக்காட்டி உள்ளார்.
"பிரிட்டனில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 81 விழுக்காட்டினருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 59 விழுக்காட்டினருக்கு இரண்டு தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. எனினும் முன்னெச்சரிக்கையாக பிரிட்டன் முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்படுகிறது," என்று ரன்தீப் குலேரியா மேலும் கூறியுள்ளார்.
ரூ.4 லட்சம் இழப்பீடு; கைவிரித்த மத்திய அரசு
இதற்கிடையே கொரோனா தொற்றால் உயிரிழப்போர் குடும்பத்தாருக்கு நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க இயலாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன் மீதான விசாரணையின் போது பேரிடர்களால் உயிரிழப்போர் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்க பேரிடர் மேலாண்மை சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு சுட்டிக்காட்டியது.
கொரோனாவால் உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது என்றும் பேரிடர் சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கக் கூறுவது பொருத்தமாக இருக்காது என்றும் மத்திய அரசு மேலும் தெரிவித்துள்ளது.
கொரோனா போலி மருந்து; இரண்டு மருத்துவர்கள் கைது
கொரோனா, கறுப்புப் பூஞ்சை நோய்களைக் குணப்படுத்தும் என்று கூறி போலி மருந்துகளை விற்பனை செய்த இரு மருத்துவர்கள் உட்பட பத்து பேரை டெல்லி போலிசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து ஏராளமான போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதான இரு மருத்துவர்களும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

