மும்பை: இந்தியாவில் டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று பரவத் தொடங்கி உள்ளது.
மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலும் இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா பிளஸ் கொரோனா தொற்றால் பெரும் அச்சுறுத்தல் இல்லை என மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் இந்தப் புதிய வகை தொற்றால் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார்.
அம்மாநிலத்தில் அண்மைய சில தினங்களாகத்தான் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.
தற்போது அன்றாடத் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை ஆறு ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி வரும் நிலையில் டெல்டா பிளஸ் தொற்று புதிய அச்சுறுத்தலாக இருக்கிறது.
இதற்கிடையே கேரளாவில் மூன்று பேர் இந்தப் புதிய வகைத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாலக்காடு, பத்தனம்திட்டா ஆகிய இரு மாவட்டங்களில் டெல்டா பிளஸ் தொற்று பரவியிருப்பதை அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மூவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.
மத்திய பிரதேசத்தில் நான்கு பேருக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டெல்டா பிளஸ் பாதிப்பு குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் இந்த வகைத் தொற்றால் அதிக ஆபத்து இல்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

