சரத்பவார், யஷ்வந்த் சின்ஹா, பிரசாந்த் கிஷோர் தீவிர முயற்சி
புதுடெல்லி: பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதிலும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்க்கும் முயற்சியைத் தொடங்கி உள்ளார் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார்.
முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜகவிலிருந்து விலகியவருமான யஷ்வந்த் சின்ஹாவும் சரத்பவாருடன் இம்முயற்சியில் கைகோர்த்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமையன்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரும் சரத்பவாரும் மும்பையில் சந்தித்துப் பேசினர். இதையடுத்து பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை இணைத்து ஓர் அணியை உருவாக்கும் முயற்சி தொடங்கி உள்ளதாகப் பேசப்பட்டது.
இந்நிலையில் எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படவில்லை.
மாறாக, அக்கட்சியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென கட்சித் தலைமைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் கபில்சிபல், மணிஷ் திவாரி, விவேக் தங்கா ஆகிய மூவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இது அரசியல் பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைத்த நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என அம்மூன்று மூத்த காங்கிரஸ் தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களின்போது திமுக, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் தேர்தல் வியூக ஆலோசகராக செயல்பட்டார் பிரசாந்த் கிஷோர். இவ்விரு கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து அவர் மீண்டும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த நடவடிக்கையில் யஷ்வந்த் சின்ஹா தீவிரமாக ஈடுபட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது. இதை காங்கிரஸ் தலைமை ஏற்குமா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.
இத்தகைய சில காரணங்களால்தான் தற்போது சரத்பவார் உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சித் தலைமையுடன் இந்த ஏற்பாடு குறித்து ஏதும் பேசவில்லை எனக் கூறப்படுகிறது.