புதுடெல்லி: கடந்த 14 நாள்களாக இந்தியாவில் கிருமித்தொற்றுப் பாதிப்பு ஐந்து விழுக்காட்டுக்கும் கீழ் பதிவாகி வருகிறது. எனினும் இதை வைத்து இரண்டாவது கொரோனா அலை முடிவுக்கு வந்து விட்டதாக முடிவு செய்துவிடக்கூடாது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்றாட தொற்று எண்ணிக்கை தொடர்ந்து 14 நாள்களுக்கு 5 விழுக்காடு அல்லது அதற்கும் கீழ் பதிவாகி வந்தால் கட்டுப்பாடுகளின்றி இயல்புநிலை திரும்புவதாக கருதலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 14 நாள்களில் தொற்று பாதிப்பு விகிதம் சராசரியாக 3.32 விழுக்காடாக உள்ளது. மேலும் அன்றாட தொற்று பாதிப்பு கடந்த 14 நாள்களில் ஒருமுறைகூட 5 விழுக்காட்டைத் தாண்டவில்லை.
இந்நிலையில் டெல்டா பிளஸ் தொற்றின் பரவல் வேகம் குறித்து முழு விவரங்களும் கிடைக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் நிபுணர்கள், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் தொற்று விகிதம் அதிகமாக இருப்பதை கவனிக்க வேண்டும் என்கின்றனர்.

