செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
ae387214-1e73-4112-8b02-3188e96341a6
-
Google News Preferred Icon

பெட்ரோல் விலை: நூதன ஆர்ப்பாட்டம்

திருவனந்தபுரம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கேரளாவில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நேற்று முன் தினம் சாலையில் வந்த வாகனங்களை நிறுத்தி காங்கிரசார் மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரியப்படுத்தினர். முக்கிய சாலைகளில் திடீரென வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. காலை 11 முதல் 11.15 மணி வரை நீடித்த இந்தப் போராட்டத்தின்போது அதில் பங்கேற்றவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் மூண்டதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

முதல்வர் காலில் விழுந்த ஆட்சியர்

ஹைதராபாத்: தெலுங்கானாவில் வெங்கட்ராம் ரெட்டி என்ற மாவட்ட ஆட்சியர் நேற்று முன்தினம் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் அலுவலக திறப்புவிழாவின்போது, அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் காலில் விழுந்து வணங்கியது சர்ச்சையாகி உள்ளது. பல்வேறு தரப்பினர் இதை விமர்சித்துள்ள நிலையில், "முதல்வர் எனது தந்தையைப் போன்றவர். பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெறுவது எங்கள் கலாசாரம். இதில் தவறில்லை," என ஆட்சியர் வெங்கட்ராம் விளக்கமளித்துள்ளார்.

'டுவிட்டர் இந்தியா' மீது வழக்குப்பதிவு

லக்னோ: சர்ச்சைக்குரிய காணொளிப் பதிவை நீக்குமாறு உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டும் அதை டுவிட்டர் நிறுவனம் செயல்படுத்தவில்லை எனக் கூறி போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து நேரில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு 'டுவிட்டர் இந்தியா' நிறுவன இயக்குநர் மனீஷ் மகேஷ்வரிக்கு போலிசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.