புதுடெல்லி: கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் இரண்டு வயது குழந்தைகள் முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா, செப்டம்பர் மாதம் முதல் இந்தப் பணி தொடங்கும் என்றார்.
நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குழந்தைகளுக்கும் தடுப்பூசி தயாராகுமா எனும் எதிர்பார்ப்பு பெற்றோர் மத்தியில் நிலவி வந்தது.
இதற்கிடையே, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்குச் செலுத்தி பரிசோதிப்பதற்கான நடைமுறை கடந்த 7ஆம் தேதி தொடங்கியது.
எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்ற இந்த பரிசோதனை முயற்சிக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு அனுமதி அளித்தது.
அடுத்தடுத்து மூன்றுகட்டப் பரிசோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டால்தான் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அந்த தடுப்பூசியைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் இரண்டு கட்ட பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளது.
"மூன்றாவது கட்டப் பரிசோதனையும் முடியும் பட்சத்தில் செப்டம்பர் மாதத்தில் இருந்து இரண்டு வயது குழந்தைகள் முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்," என ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இதற்கு மத்திய அரசின் அனுமதி கிடைக்கும் என தாம் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இத்தகவல் பெற்றோர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.
இதற்கிடையே இரு தவணை தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டால், 95 விழுக்காடு உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் தெரிவித்துள்ளது. இதே போல் முதல் தடுப்பூசி மட்டும் போட்டுக்கொண்டால் 82 விழுக்காடு மரணத்தை தவிர்க்கலாம் என்றும் அம்மன்றம் தெரிவித்துள்ளது.
இறுதிக்கட்ட பரிசோதனை நடப்பதாக எய்ம்ஸ் இயக்குநர் தகவல்

