செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
0e2fcb12-4ee2-42b4-a5d5-1021723abc35
-

புது சீர்திருத்தங்கள்: மோடி பெருமிதம்

புதுடெல்லி: முன்பெல்லாம் நிர்ப்பந்தத்தின் பேரில்தான் சீர்திருத்தங்கள் வந்தன என்றும் கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவும் உறுதிப்பாடு, ஊக்கத்தொகையின் அடிப்படையில் சீர்திருத்தம் ஏற்பட்டுள்ளது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். பெருந்தொற்று காலத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கிடையே நல்லுறவு நிலவுவதாகவும் அதனால் பல சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

'கொரோனா மீது மட்டுமே கவனம்'

புதுடெல்லி: தற்போது கொரோனா நெருக்கடி குறித்து மட்டுமே தாம் கவனம் செலுத்தி வருவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள் ளார். அரசியல் குறித்து விவாதிக்க இது தகுந்த நேரமல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். "அரசு எவ்வாறு செயல்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டுவதுதான் எனது நோக்கம். இதிலிருந்து யாரையும் திசைதிருப்ப மாட்டேன். அரசியல் குறித்துப் பேச இடமுள்ளது. அதற்கான நேரம் வரும்போது பேசுவேன்," என்று டெல்லியில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்டார் ராகுல்.

சாணக்கழிவில் இருந்து வெளியான விஷவாயு தாக்கி நால்வர் பலி

லக்னோ: சாணக்கழிவுகளில் இருந்து வெளியான விஷவாயு தாக்கி உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ராஜ்பூர் கிராமத்தில் நால்வர் பலியாகினர். அங்குள்ள ஒரு வீட்டில் தரைக்கு அடியில் சிமெண்ட் தொட்டியில் கொட்டி வைத்திருந்த சாணக் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது கூலித் தொழிலாளிகள் நால்வரும் விஷவாயு தாக்கியதில் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தனர். தகவலறிந்து போலிசார் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டபோதும் நால்வரையும் இறந்த நிலையில்தான் மீட்க முடிந்தது. பலியானவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் இரு மகன்களும் அடங்குவர்.

மோடி தலைமையில் கூட்டம்: காஷ்மீர் தலைவர்கள் பங்கேற்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு திரும்பப் பெற்றிருப்பதை ஏற்க இயலாது என குப்கர் கூட்டணித் தலைவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித் துள்ளனர். இந்நிலையில் காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் பிரதமர் மோடி தலைமை யில் 24ஆம் தேதி (இன்று) நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு குப்கர் கூட்டணி தலைவர் களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அத்தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

27 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

ஸ்ரீநகர்: 27 கிலோ ஹெராயின் போதைப் பொருளை காஷ்மீர் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். ஹிரா நகரில் ஹெராயின் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு அதிரடி சோதனை நடந்தது. அப்போது பல கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் சந்தை மதிப்பு 135 கோடி ரூபாய் ஆகும்.