புதுடெல்லி: இந்திய எல்லைப் பகுதியில் சீனா மீண்டும் படை நகர்வுகளை மேற்கொண்டிருப்பது பதற்றத்துக்கு வித்திட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய-அமெரிக்க கடற்படைகள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டன.
அண்மைய சில மாதங்களாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. சீனா எல்லை கடந்து ஏராளமான முறை ஊடுருவி இருப்பதாக இந்தியா சாடுகிறது. இதை திட்டவட்டமாக மறுத்தாலும் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து படைகளைக் குவித்து வருகிறது சீனா.
தற்போது அந்நாட்டு ராணுவத்தின் பலமான பிரிவாக கருதப்படும் S-400 ஏவுகணைப் படைப்பிரிவு லடாக் அருகே உள்ள சின்ஜியாங் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அருணாச்சலப் பிரதேசம் எல்லை அருகே உள்ள சீன விமானப்படைத் தளத்திலும் S-400 படைப்பிரிவு வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் இந்திய விமானப்படையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டதாக பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இந்நிலையில், S-400 ஏவுகணைகளை முறியடிக்கும் தொழில்நுட்பம் இந்தியாவிடம் உள்ளதாக முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
இத்தகைய சூழ்நிலையில் இந்திய-அமெரிக்க ராணுவத்தின் கூட்டுப்பயிற்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்தப் பயிற்சியில் அணுசக்தி திறன் கொண்ட அமெரிக்க போர்க்கப்பலும், விமானங்களும் பங்கேற்றுள்ளன. இந்தியத் தரப்பில் ஜாகுவார், சுகாய் ரக போர் விமானங்கள் இடம்பெற்றன.
மேலும், எதிரி விமானங்களை நடுவானில் தடுத்து நிறுத்தும் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இந்திய கடற்படையின் போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களைத் தவிர்த்து இந்திய விமானப் படையின் போர்க் கப்பல்களும் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கத் தரப்பிலும் அதன் போர் விமானந் தாங்கிக் கப்பலான ரொனால்டு ரேகன் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் விமானங்கள் பங்கேற்றுள்ளன.
இந்திய கடற்படையின் செய்தித் தொடர்பாளர் விவேக் மாத்வானி செய்தியாளர்களிடம் இத்தகவலைத் தெரிவித்தார்.
அமெரிக்காவும் இந்தியாவும் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய ஆற்றல் கொண்டவை என்பதை வெளிப்படுத்தும் வகையில் நடைபெறும் இத்தகைய பயிற்சியால் இருதரப்பு உறவும் ஒத்துழைப்பும் மேலும் அதிகரிக்கும் என்றார் விவேக் மாத்வானி.

