லக்னோ: உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி முதல்வர் வேட்பாளராக களமிறங்க வாய்ப்புண்டு என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே அம்மாநிலத்தில் உள்ள பெண்களின் பாதுகாப்பு கடவுள் கையில்தான் உள்ளது என்று பிரியங்கா கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் பெண்கள் மீதான தாக்குதல்களும் பாலியல் பலாத்காரங்களும் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.
இந்நிலையில் மதுரா பகுதியில் 17 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சிலர் அச்சிறுமியை இரண்டாவது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது.
இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரியங்கா காந்தி, உத்தரப் பிரதேச மக்கள் உயிர் பயத்தில் நடுங்குவதாகக் கூறியுள்ளார்.
"பாதிக்கப்பட்ட சிறுமி உயிருக்குப் போராடுகிறாள். இங்கு நடைபெறும் காட்டாட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இங்குள்ள அரசாங்கம் உறங்குகிறது," என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் பிரியங்கா காந்தி.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் கட்சியை வழிநடத்தும் அணித் தலைவராக பிரியங்கா செயல்படுகிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
எனினும் பிரியங்கா முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்ற கேள்விக்கு தாம் பதில் அளிக்கப்போவதில்லை என்றார் அவர். "ஆனால், பிரியங்கா காந்தி காங்கிரசுக்கான ஓர் அற்புதமான சிறந்த முகம்," என்றார் சல்மான் குர்ஷித்.

