பத்மநாபசுவாமி கோவில் திறப்பு
திருவனந்தபுரம்: கேரளாவின் பிரசித்திபெற்ற பத்மநாபசுவாமி கோவில் பக்தர்களின் தரிசனத்துக்காக நேற்று திறக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஏராளமான பக்தர்களின் கோரிக்கைகளை ஏற்று பத்மநாபசுவாமி கோவிலைத் திறக்க அரசு அனுமதி அளித்தது. நேற்று தரிசனத்துக்காக நிறைய பக்தர்கள் குவிந்தனர். எனினும், ஒரே சமயத்தில் 15 பக்தர்கள் மட்டுமே கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்குட்பட்டு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. கேரளாவில் கொரோனா தொற்று பரவல் விகிதம் 16 விழுக்காட்டிற்கும் கூடுதல் உள்ள இடங்களில் கோவில்கள் திறக்க அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலக டெஸ்ட் சாம்பியன் போட்டி: நியூசிலாந்திடம் இந்தியா தோல்வி
புதுடெல்லி: இந்தியா, நியூசிலாந்து இடையே நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வி கண்டது. இங்கிலாந்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்தியா 217 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தது. இதையடுத்து விளையாடிய நியூசிலாந்து 249 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாகப் போராடிய நிலையில் மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 149 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்ததை அடுத்து நியூசிலாந்து அணிக்கு 140 ஓட்டங்கள் வெற்றிக்கான இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதை எட்டும் நோக்கில் துடிப்புடன் விளையாடிய நியூசிலாந்து மட்டை வீரர்கள் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றியை உறுதி செய்தனர். இதன்மூலம் உலக டெஸ்ட் போட்டி சாம்பியனாக நியூசிலாந்து அணி வாகை சூடியுள்ளது. இந்தத் தோல்வியை அடுத்து இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோப்ப நாய்களுக்கு நினைவிடம், நீச்சல் குளம்: கேரளா அசத்தல்
திருவனந்தபுரம்: கேரளாவில் போலிஸ் படையில் பணியாற்றி இறந்த மோப்ப நாய்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அம்மாநில அரசு நினைவிடமும் கல்லறையும் கட்டியுள்ளது. இவ்வாறு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது ஆசியாவிலேயே இதுதான் முதன்முறை என ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. இது மட்டுமல்லாமல் வயது மூப்பு காரணமாக ஓய்வுபெறும் மோப்ப நாய்களுக்கு என சிறப்புத் தனி அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த அறைக்குள் மின் விசிறி, தொலைக்காட்சிப் பெட்டி என அனைத்து வசதிகளும் இருக்கும். மேலும், ஓய்வுபெற்ற 19 மோப்ப நாய்களின் பயன்பாட்டுக்காக தனி நீச்சல் குளமும் உள்ளது என்றும் அவற்றின் உடல்நிலையைக் கவனிக்க இரு மருத்துவர்களும் பணியில் உள்ளனர்.
உலக யோகா தினம்: 17 லட்சம் கர்ப்பிணிப் பெண்கள் பங்கேற்பு
புதுடெல்லி: அனைத்துலக யோகா தினத்தையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் 1.7 மில்லியன் (17,37,440) கர்ப்பிணிப் பெண்கள் பங்கேற்றதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இவர்களில் பாலூட்டும் தாய்மார்களும் அடங்குவர். இது குறித்து மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கடந்த 21ஆம் தேதியன்று யோகா நிகழ்ச்சிகளில் 4.2 மில்லியன் (42,28,802) குழந்தைகள் கலந்து கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2.27 மில்லியன் இளம் பருவத்தினரும் பங்கேற்றுள்ளனர்.

