2,053 பேருக்கு போலி தடுப்பூசி போட்ட கும்பல்
மும்பை: தடுப்பூசி தட்டுப்பாட்டைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஒரு கும்பல், தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த தடுப்பூசி முகாம்கள் போல் அமைத்து ஏராளமானோருக்கு போலி தடுப்பூசி போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்டணமாக ஆள் ஒன்றுக்கு ரூபாய் 1,260 வசூலித்தனர். ஆனால் ஒருவருக்கும் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் வழங்கப்படவில்லை. சிலர் இது குறித்து கேட்ட பின்பு, பிரபல மருத்துவமனை ஒன்றின் பெயரில் தடுப்பூசிச் சான்றிதழ் வழங்கப்பட்டன.
மும்பை காந்திவிலி எஸ்.வி. ரோடு பகுதியில் ஹிரானந்தானி அடுக்குமாடி குடியிருப்பு சங்க நிர்வாகத்தை பிரபல தனியார் மருத்துவமனை சார்பில் அணுகிய ஒரு கும்பல், அங்கு வசித்து வரும் 390 பேருக்கு போலி தடுப்பூசி போட்டது.
மேலும் தடுப்பூசி போட்டதற்கான தகவல்கள் கோவின் இணையத் தளத்தில் இடம்பெறாததால் அடுக்குமாடிக் குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தடுப்பூசி போட்ட யாருக்கும் காய்ச்சல், உடல்வலி போன்ற பக்க விளைவுகள் ஏற்படாததால், தங்களுக்குப் போடப்பட்டது போலி தடுப்பூசி என்றும், பணமோசடி கும்பல் கைவரிசை காட்டியதும் தெரியவந்தது.
தடுப்பூசி சான்றிதழில் இடம்பெற்றுள்ள பிரபல தனியார் மருத்துவமனைகள் தாங்கள் இதுபோன்ற தடுப்பூசி முகாம்களை நடத்தவில்லை என்று மறுப்பு தெரிவித்தன. பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில், மோசடிக் கும்பலை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒரு மருத்துவர் முன்பிணை கேட்டு நீதிமன்றத்தில் மனு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், வழக்கின் நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி விசாரணை நிலை அறிக்கையை நேற்று அரசு தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள பரபரப்பு தகவல்கள் வருமாறு:-
போலி கொரோனா தடுப்பூசி புகார் தொடர்பாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 400 பேரிடம் சாட்சியம் பெறப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் ஒரு மருத்துவர் உள்பட சிலர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். மேலும் பலர் தலைமறைவாக உள்ளனர். இந்த மோசடி கும்பல் 9 முகாம்களை நடத்தி, 2,053 பேருக்கு போலி கொரோனா தடுப்பூசி போட்டு இருப்பது இதுவரையிலான நிலவரப்படி தெரியவந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

