மைசூரு: மைசூரு மாவட்ட ஆட்சியர் ரோகிணி சிந்தூரி, பாகுபாடின்றி தவறு செய்பவர்களைத் தட்டிக்கேட்க அஞ்சாதவர் என்று பாராட்டுப்பெற்றவர்.
தவறு செய்பவர்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்களை சும்மாவிட மாட்டார். எனவே, இவர் அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொள்வார். அப்படி இந்த முறை நீச்சல்குள சர்ச்சையில் சிக்கியுள்ளார். மைசூரு ஆட்சியரின் அதிகாரபூர்வ இல்லத்தில் ரோகிணி சிந்தூரி அனுமதி பெறாமல் நீச்சல் குளம், மற்றும் உடற்பயிற்சிக் கூடம் கட்டியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து கர்நாடக அரசு இது குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டது.
மைசூரு வட்டார ஆணையர் ஜி.சி.பிரகாஷ் இது குறித்த ஆய்வை மேற்கொண்டார்.
நீச்சல் குளம் கட்டுவது தொடர்பான ஆய்வறிக்கையில், ரோகிணி சிந்தூரி குளம் கட்டுவதற்குத் தேவையான அனுமதியைப் பெறவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், சிந்தூரி, பாரம்பரிய சொத்தான ஜல் சன்னிதியில் குளம் கட்டுவதற்கு முன்பு பாரம்பரியத் துறையிடமிருந்தோ அல்லது அதிகாரம் பெற்ற பாரம்பரியக் குழுவினரிடமிருந்தோ அனுமதி பெறவில்லை.
இதன் மூலம் விதிமுறைகளை மீறி உள்ளார் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி கட்டுமானப் பணி தொடங்கி பிப்ரவரி 26ஆம் தேதி நிறைவடைந்தது என ஆய்வு அறிக்கை கண்டறிந்தது. இருப்பினும், மார்ச் 2ஆம் தேதி நடைபெற்ற நிர்மிதி கேந்திராவின் பொதுக் கூட்டத்தில் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.