கோல்கத்தா: கர்நாடகாவில் கிருமித்தொற்றுப் பரவல் வேகமாகக் குறைந்து வருகிறது. இந்நிலையில் அங்குள்ள பள்ளிகளைத் திறப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் நேற்று முன்தினம் 114 பேர் கிருமித் தொற்றுக்குப் பலியாகினர். எனினும் எட்டு மாவட்டங்களில் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக மைசூருவில் 22 பேரும் பெங்களூரில் 17 பேரும் பலியாகி விட்டனர். மொத்த பலி எண்ணிக்கை 34,539ஆக கூடியுள்ளது. புதிதாக சுமார் 3,300 பேருக்கு கிருமி தொற்றியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அம்மாநிலத்தில் உள்ள பள்ளிகளைத் திறப்பது குறித்து சுகாதாரத் துறையின் ஆலோசனைகளைப் பெற்று முடிவெடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் நீண்ட காலம் வீட்டிலேயே முடங்கி இருப்பது அவர்களது எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று குறிப்பிட்ட அவர், கடந்த காலத்தில் பள்ளிகள் மூலம் கொரோனா தொற்று பரவவில்லை எனச் சுட்டிக் காட்டினார்.
இந்நிலையில் கர்நாடகாவில் பெரிய மண்டபங்களிலும், சொகுசு தங்கு விடுதிகளிலும் திருமணங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பெரும்பாலான கடைகளும் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
"பெங்களூருவில் குறைந்த அளவில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருமண நிகழ்வுகளில் 40 பேர் மட்டுமே பங்கெடுக்க வேண்டும். இந்த அறிவிப்பு வரும் 28ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்," என்றும் அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

