டெல்லி எல்லையில் இன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணி
புதுடெல்லி: வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலி யுறுத்தி டெல்லி எல்லையில் இன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்த உள்ளனர். இதையொட்டி அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தைத் தொடங்கி நேற்றுடன் ஆறு மாதங்கள் நிறைவடைந்தன. இந்நிலையில் தொடர் போராட்டங்களில் ஈடுபடும் விவசாயிகள் அதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வலியுறுத்தியுள்ளார். ஆனால், கோரிக்கைகளில் விடாப்பிடியாக உள்ள விவசாயிகளோ, பேரணி நடத்த உள்ளனர்.
சபரிமலையில் ஆடி மாத பூசை: பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி
திருவனந்தபுரம்: ஆடி மாத பூசைக்கு கேரளாவில் வழிபாட்டுத் தலங்களைத் திறக்கலாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆடிமாத பூசையை ஒட்டி இணையம் வழி முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க முகக் கவசம்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மனோஜ் ஆனந்த் என்பவர் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க முகக்கவசத்துடன் வலம் வருகிறார். கான்பூரில் வசிக்கும் அவரை அப்பகுதி மக்கள் 'தங்க பாபா' என்றுதான் குறிப்பிடுகின்றனர். முகக்கவசம் மட்டும் அல்லாமல் பல தங்க நகைகளையும் அணிந்துள்ளார் மனோஜ். "இனி வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாகி விட்டதால் இவ்வாறு தங்கத்தினாலான முகக்கவசம் அணியவேண்டும்," என்று தோன்றியது என்கிறார் மனோஜ்.
மத்திய அமைச்சர் ரவிசங்கரின் டுவிட்டர் கணக்கு சிலமணி நேரம் முடக்கம்
புதுடெல்லி: மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் டுவிட்டர் கணக்கு சில மணி நேரம் முடக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க மின்னிலக்கப் பதிப்புரிமை சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாததால் தமது டுவிட்டர் கணக்கு சில மணி நேரங்களுக்கு முடக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இப்படி முன் அறிவிப்பின்றி கணக்கு முடக்கப்பட்டது சட்டவிரோதம் என்றார்.
மூன்றாவது திருமணம்: கணவரை கொன்ற இரண்டாவது மனைவி
லக்னோ: மூன்றாவது திருமணம் செய்துகொள்ளப் போவதாக கூறிய ஆடவரை, அவரது இரண்டாவது மனைவி கொலை செய்துள்ளார். இதையடுத்து உத்தரப்பிரதேச போலிசார் அவரைக் கைது செய்தனர். முசாபர் நகரைச் சேர்ந்தவர் மவுலவி வகீல் அகமது. 57 வயதான இவருக்கு ஏற்கெனவே இரண்டு மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் மூன்றாவது திருமணம் செய்துகொள்ளப் போவதாக வகீல் அகமது தொடர்ந்து கூறிவந்துள்ளார். இதற்கு இரண்டாவது மனைவி ஹாஜ்ரா எதிர்ப்புத் தெரிவித்தார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று தனது கணவர் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவரது பிறப்புறுப்பைக் கூர்மையான ஆயுதத்தால் துண்டித்தார் ஹாஜ்ரா. இதனால் வலி வேதனை தாங்காத வகீல் அகமது அங்கேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதன் பின்னர் நடந்ததை மறைத்து கணவருக்கு இறுதிச்சடங்கு செய்ய முயன்ற ஹாஜ்ராவை அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் போலிசார் கைது செய்துள்ளனர்.

