மும்பை: மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அனில் தேஷ்முக் வீட்டில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
பண மோசடி வழக்கு தொடர்பாக வெள்ளிக்கிழமையன்று மும்பை, நாகபுரியில் உள்ள அவரது வீடுகளில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அனில் தேஷ்முக் மாநில உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது மும்பை காவல்துறை ஆணையர் பரம்பீர் சிங்கிடம் மும்பையில் உள்ள கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து மாதந்தோறும் நூறு கோடி ரூபாய் லஞ்சம் வசூலித்துத் தரவேண்டும் என்று வற்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து பரம்பீர்சிங் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அனில் தேஷ்முக்கும் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.
இதையடுத்து அனில் தேஷ்முக் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறது. இந்நிலையில் அவர் மீது அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து அவரது வீடுகளில் வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டது. அனில்தேஷ் முக்கின் தனிச்செயலாளர் சஞ்சீவ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

