புதுடெல்லி: தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் காங்கிரஸ் கட்சித் தலைமை தேர்தல் ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கான பேச்சுவார்த்தை பல மாதங்களாக நடைபெற்று வந்ததாகவும் மிக விரைவில் அந்த ஒப்பந்தம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
பிரதமர் மோடிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் இணைக்கும் முயற்சியை பிரசாந்த் கிஷோர் தொடங்கி உள்ளதாக 'சமயம்' ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற மேற்கு வங்கத் தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சி உடனான பிரசாந்த் கிஷோரின் 'ஐ-பேக்' நிறுவனம் செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் 2024ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.
தேர்தல் வியூகப் பணியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்த பிரசாந்த், அடுத்தகட்டமாக பாஜகவுக்கு எதிரான அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.
இந்நிலையில் அவரது நிறுவனத்துக்கும் காங்கிரஸ் கட்சித் தலைமைக்கும் இடையே தேர்தல் வியூகப் பணிக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக அந்த ஊடகச் செய்தி மேலும் தெரிவிக்கிறது.
இதனால் தேசிய அரசியல் களத்தில் பரபரப்பு நிலவுகிறது.
இதற்கு முன்பு அரவிந்த் கெஜ்ரிவால், நிதிஷ்குமார், அமரீந்தர் சிங், ஜெகன்மோகன் ரெட்டி, மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல மாநில முதல்வர்களுக்காக தேர்தல் வியூகப் பணிகளை மேற்கொண்டுள்ளார் பிரசாந்த் கிஷோர்.

