திருவனந்தபுரம்: பெருந்தொற்று காலத்தில் ஒரு தாயும் மகனுமாக சேர்ந்து 51 நாட்களில் 28 மாநிலங்களுக்கு சாகசப் பயணம் மேற்கொண்டு ஊர் திரும்பி உள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த 40 வயதான மித்ரா சதீஷ், கொச்சியில் உள்ள அரசு ஆயுர்வேத கல்லூரியில் துணைப் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சதீஷ்.
இத்தம்பதியர்க்கு 15 வயதில் ஒரு மகளும் 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
சாகசப் பயணங்களை மேற்கொள்வதில் அதிக ஈடுபாடு கொண்டவர் மித்ரா. ஊரடங்கின்போது வீட்டிலேயே இருக்காமல் காரில் சாகசப் பயணம் மேற்கொள்வது என அவர் முடிவு செய்தபோது அவரது மகன் நாராயணனும் தாயுடன் இணைந்தார்.
இதையடுத்து கடந்த மார்ச் 17ஆம் தேதி இருவரும் தங்கள் பயணத்தைத் தொடங்கினர். அடுத்து வந்த 51 நாட்களில் இருவரும் 28 மாநிலங்களுக்குச் சென்றுள்ளனர்.
அவற்றுள் தமிழகம், புதுவை, ஆந்திரா, தெலுங்கானா, ஒரிசா, மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவை அடங்கும். தமது கணவரும் குடும்பத்தாரும் தந்த ஆதரவால்தான் இந்தப் பயணம் சாத்தியமானது என்று குறிப்பிடும் மித்ரா சதீஷ், உலகம் முழுவதையும் காரில் சுற்றி வரவேண்டும் என்பதே தமது அடுத்த இலக்கு என்கிறார்.
"முதற்கட்டமாக 100 நாள்களில் ஒட்டுமொத்த இந்தியாவையும் சுற்றிப் பார்க்க விரும்பினேன். கொரோனா நெருக்கடியால் பயண காலத்தை 51 நாட்களாகக் குறைத்துவிட்டோம். காடு, மலை, பள்ளத்தாக்கு என அனைத்து நிலப்பரப்புகளையும் வானிலைகளையும் கடந்து சென்றுள்ளோம். பழங்குடிகள், கிராம மக்கள் என பல்வேறு தரப்பு மக்களைச் சந்தித்தோம். புதிய கலாசாரங்கள் அறிமுகமாகின," என்கிறார் மித்ரா.
பல மாநிலங்களுக்குச் சென்றபோது அங்கு கிடைக்கும் உணவு வகைகள், பேசும் மொழிகள், வாழ்வியலை அறிந்து கொண்டதாகச் சொல்பவர்,. நாளொன்றுக்கு 17 மணி நேரம் பயணம் செய்ததாகத் தெரிவித்தார். இதன்மூலம் 16,800 கிலோமீட்டர் தொலைவை வெற்றிகரமாக கடந்த இருவரும் மே 6ஆம் தேதி சொந்த ஊர் திரும்பி உள்ளனர். ஒன்றரை லட்சம் ரூபாய் செலவிட்டு இப்பயணத்தை மேற்கொண்டதாகச் சொல்கிறார் மித்ரா.

