ஜம்மு: பாதுகாப்புமிக்க ஜம்மு விமானப்படைத் தளம் மீது நேற்று அதிகாலை 1.40 மணியளவில், ஆறு நிமிட இடைவெளியில் இரு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.
ஆளில்லா வானூர்தி மூலம் இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்திய ராணுவத் தளம் ஒன்றின்மீது முதன்முறையாக ஆளில்லா வானூர்தி மூலம் நடத்தப்பட்ட தாக்குதல் இதுதான். இதில் விமானப்படைப் பணியாளர்கள் இருவர் இலேசான காயம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, தேசிய வெடிகுண்டு தரவு மைய வல்லுநர்கள், தடயவியல் வல்லுநர்கள், ஜம்மு-காஷ்மீர் போலிசார் நிகழ்விடத்திற்கு விரைந்தனர்.
ஒரு குண்டுவெடிப்பில் தொழில்நுட்பப் பிரிவு செயல்படும் கட்டடத்தின் கூரைப்பகுதி சேதமடைந்தது. இன்னொரு குண்டுவெடிப்பு திறந்தவெளியில் நடத்தப்பட்டது. வெடிப்புச் சத்தம் ஒரு கிலோ மீட்டருக்கு அப்பாலும் கேட்டதாகக் கூறப்பட்டது.
இந்திய ராணுவப் படையினரின் தயார்நிலையை ஆய்வு செய்வதற்காகத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று லடாக் செல்ல இருக்கும் நிலையில், இந்தக் குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
தாக்குதல் குறித்து விமானப் படையும் தேசிய புலனாய்வுப் பிரிவும் விசாரித்து வருகின்றன.
கடந்த ஈராண்டுகளாகவே பாகிஸ்தான் ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தி, எல்லை தாண்டி ஆயுதங்களை வீசி வருவதாகச் சொல்லப்படுகிறது.
வெடிப்பொருளுடன் ஆடவர் கைது
இதற்கிடையே, திரிகூட நகர் போலிஸ் நிலைய எல்லைக்குள் அமைந்துள்ள கடைத்தொகுதி ஒன்றில், பயங்கரவாதி எனச் சந்தேகிக்கப்படும் ஒருவரை ஜம்மு-காஷ்மீர் போலிசார் கைது செய்துள்ளனர்.
அந்த ஆடவரிடம் இருந்து அதி நவீன வெடிப்பொருள் சாதனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் எடை கிட்டத்தட்ட ஐந்து கிலோ இருக்கும் என்று போலிஸ் கூடுதல் தலைமை இயக்குநர் முகேஷ் குமார் தெரிவித்தார்.

