புதுடெல்லி: இவ்வாண்டு இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவர்க்கும் கொவிட்-19 தடுப்பூசி போட இந்திய அரசு இலக்கு கொண்டுள்ளது.
இந்நிலையில், அந்த இலக்கை எட்ட இன்னும் 135 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 375 பக்க உறுதிமொழிப் பத்திரத்தில் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
"இந்தியாவில் 18 வயதுக்குமேல் 93-94 கோடிப் பேர் உள்ளனர். அவர்களுக்கு இருமுறை தடுப்பூசி போட 186-188 கோடி தடுப்பூசிகள் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. ஜூலை இறுதிக்குள் 51.6 கோடி தடுப்பூசிகள் கிடைத்துவிடும்," என்று அதில் கூறப்பட்டு உள்ளது.
கொவிஷீல்டு, கொவேக்சின், ஸ்புட்னிக் வி, பயோலாஜிக்கல் இ, ஸைடஸ் கேடிலா ஆகிய ஐந்து நிறுவனங்களிடம் இருந்து மேலும் 135 கோடி தடுப்பூசிகளைப் பெற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இவற்றில் பயோலாஜிக்கல் இ, ஸைடஸ் கேடிலா ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனையில் உள்ளன.
இதுவரை, 18 வயதுக்கு மேற்பட்டோரில் 5.6 விழுக்காட்டினர்க்கு மட்டுமே இரண்டு தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளன.

