ஸ்ரீநகர்: ஜம்முவில் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் (ட்ரோன்) மூலம் நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பு இருப்பதாக பாதுகாப்புப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ராணுவம் உடனடியாக செயலில் இறங்கி பதிலடி கொடுத்ததன் மூலம் பெரும் தாக்குதலும் சேதமும் தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
அண்மைய சம்பவத்தில் பயன் படுத்தப்பட்ட வெடிபொருள்களை லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பினர் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தலைவர் டிஜிபி தில்பாக் சிங் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஆளில்லா விமான தாக்குதலை எதிர்கொண்ட பாதுகாப்புப் படையினர் உடனடியாக ரேடார் களின் உதவியோடு தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாகவும், இந்திய தரப்பில் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
விமான கட்டுப்பாட்டு கோபுரத்தையும் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய விமானப்படை விமானங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எனினும் உயர் பாதுகாப்பு வளையத்தில் உள்ள விமானப்படையின் தொழில்நுட்ப வளாகத்தில் வெடித்த குண்டுகள் குறைந்த வீரியம் கொண்டவை எனவும் பாதுகாப்புப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே லடாக்குக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னாள் ராணுவ வீரர்களின் நலனில் அரசு உறுதியுடன் உள்ளது என்றார்.
முன்னாள் ராணுவத்தினரின் ஈடு இணையற்ற அர்ப்பணிப்பை அரசு பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
"முன்னாள் ராணுவத்தினருக்கு ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டம் கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முடிவு, நீண்ட கால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்தது.
"முன்னாள் ராணுவத்தினரின் நலனில் அரசு கொண்டுள்ள அசைக்கமுடியாத உறுதிக்கு இது சாட்சியமாக உள்ளது," என்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்.
இந்நிலையில் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் முன்னாள் காவல்துறை அதிகாரியும் அவரது மனைவியும் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, பயஸ் அகமது என்ற அதிகாரியின் வீட்டுக்குள் நுழைந்து பயங்கரவாதிகள் தாக்கியுள்ளனர். இதில் பயஸ் அகமதுவின் மகள் ராபியா படுகாயமடைந்தார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

