செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
d2e8e789-2a32-4a68-bb5c-3c7acdfd790b
-

இரண்டு மாதங்களில் ரூ.51 ஆயிரம் கோடிக்கு தங்கம் இறக்குமதி

புதுடெல்லி: கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இந்தியா ரூ.51 ஆயிரம் கோடிக்கு தங்கம் இறக்குமதி செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.599 கோடி மதிப்பிலான தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டது. தங்க இறக்குமதி அதிகரித்திருப்பதால் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையும் அதிகரித்திருப்பதாக பொருளியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு வர்த்தகப் பற்றாக்குறை ரூ.73 கோடியாக இருந்தது என்றும் நடப்பு ஆண்டில் அது ரூ.1.58 லட்சம் கோடியாக கூடியுள்ளது என்றும் பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.

தவறான வரைபடத்தை நீக்கியது டுவிட்டர்

புதுடெல்லி: டுவிட்டர் தளத்தில் ஜம்மு காஷ்மீர், லடாக் உள்ளிட்ட பகுதிகள் வேறு நாடுகள் என குறிப்பிடப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து அந்த வரைபடத்தை டுவிட்டர் நிர்வாகம் நீக்கியுள்ளது. டுவிட்டர் நிறுவனம் ஏற்கெனவே ஒருமுறை காஷ்மீரின் 'லே' பகுதியை சீனாவின் பகுதியாக சித்திரித்திருந்தது.

கேரள கிராமங்களின் பெயரை மாற்ற வேண்டாம் என எடியூரப்பா வலியுறுத்து

பெங்களூரு: கேரள மாநிலத்தின் எல்லையோர கிராமங்களின் பெயர்களை மாற்ற வேண்டாம் என கர்நாடகா முதல்வர் எடியூரப்பா கேட்டுக் கொண்டுள்ளார். அக்கிராமங்களுக்கு கன்னடத்தில் பெயர் சூட்டப்பட்டிருப்பதாகவும் மிக விரைவில் மலையாளத்தில் பெயர் சூட்டப்பட வேண்டும் என்று கேரளாவில் கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் கேரள அரசு குறிப்பிடும் கிராமங்களில் கன்னட மக்கள்தான் அதிகம் வசிப்பதாக முதல்வர் எடியூரப்பா சுட்டிக் காட்டியுள்ளார். "காசர்கோடு, மன்ஜேஸ்வர மாவட்டங்களில் உள்ள கிராமங்களின் பெயர்களை மாற்றவேண்டாம்" என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கிடையே கேரள உள்ளாட்சி அமைப்புகள் மதுரு என்ற கிராமத்தின் பெயரை மதுரம் என்றும் மல்லா என்பதை மல்லம் என்றும் மாற்றி உள்ளன.

கார் விபத்தில் பத்து பேர் பலி

போபால்: வேகமாகச் சென்ற கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகினர். இமாச்சலப் பிரதேசத்தின் பேக் அசோக் என்ற கிராமம் அருகே நேற்று முன்தினம் இந்த விபத்து நிகழ்ந்தது. நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்று கொண்டிருந்த அந்தப் பெரிய ரக காரில் 10 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.