ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ஆயுத விநியோகத்துக்காக ஆளில்லா சிறிய ரக விமானங்களைப் (ட்ரோன்) பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் சிறிய ரக விமானங்கள் தொடர்ந்து பறப்பதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு எல்லையில் 167 ஆளில்லா விமானங்கள் பறந்ததாகவும் அடுத்த ஆண்டில் 77 சிறிய விமானங்கள் பறந்ததாகவும் தெரியவந்துள்ளது.
எல்லைக்கு அப்பால் இருந்து ஆளில்லா விமானங்கள் மூலம் கடத்தி வரப்படும் ஆயுதங்கள், வெடிகுண்டுகளை பாதுகாப்புப் படையினர் அவ்வப்போது கைப்பற்றி வருகின்றனர்.
கடந்த மாதம் 16 கையெறி குண்டுகள், ஏகே 47 ரக துப்பாக்கிகள், அவற்றுக்கான தோட்டாக்கள், கைத்துப்பாக்கிகள், வெடிபொருள்கள் ஆகியவை சிறிய ரக விமானம் மூலம் காஷ்மீருக்கு அனுப்பப்பட்டது என்றும் சம்பந்தப்பட்டவர்கள் ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்குள் கையும் களவுமாக பிடிபட்டனர் என்றும் ஜம்மு போலிசார் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11 கையெறி குண்டுகளுடன் பஞ்சாப் எல்லைக்குள் நுழைந்த ஆளில்லாத விமானத்தை போலிசார் கைப்பற்றினர். சில தருணங்களில் ஆளில்லா சிறிய ரக விமானங்களை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்திய சம்பவங்களும் நடந்துள்ளன.
இந்த விமானங்கள் தாழ்வாகப் பறக்கக்கூடியவை என்பதால் ராணுவ ரேடார்களின் பார்வையில் சிக்குவதில்லை. எனவே, எல்லை கடந்து ஆயுதங்களைக் கடத்துவதில் பயங்கரவாதிகளுக்கு இவை வெகுவாக உதவுகின்றன.
கடந்த ஆண்டு பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட 3 ஆளில்லா விமானங்களில் ஆயுதங்களுடன் கள்ள நோட்டுகளும் இருந்தன.
தீவிரவாதிகளின் இந்த உத்தி பாதுகாப்புப் படையினருக்கு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது. ஜம்மு விமானப்படைத் தளத்தைக் குறி வைத்துத் தாக்கியதிலும் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அன்றைய தினம் அவ்விமானங்கள் சுமந்துவந்த குண்டுகள் அதிக சக்தி வாய்ந்தவை என்பதால், இத்தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்பதிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தவும் இந்திய ராணுவம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது.