எஸ்பிஐ: 4 தடவைக்கு மேல்
பணம் எடுத்தால் சேவை வரி
புதுடெல்லி: இந்தியாவின் 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' வங்கியின் சேமிப்புக் கணக்கு வைத்திருப்போர் தானியங்கி இயந்திரம் அல்லது கிளைகளில் இருந்து மாதத்தில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும். ஐந்தாவது முறை பணம் எடுத்தால் முதல் சேவை கட்டணமாக, 15 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என அந்த வங்கி அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் (BSBD) கணக்குகளுக்கு இருந்த சலுகைகளைக் குறைக்கவும் சேவைக் கட்டணங்களை அதிகரிக்கவும் நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ முடிவு செய்துள்ளது.
'சிக்ஸ்பேக்' ஆசையால் ரூ.7 லட்சம் பறிகொடுத்த இளையர்
பெங்களூரு: ஒசகெரேஹள்ளியைச் சேர்ந்தவர் கௌசிக் (வயது 24). இவர் பனசங்கரியில் உள்ள உடற்பயிற்சி மையத்திற்கு தினமும் சென்று உடலை கட்டுக்கோப்பாக வைக்க பயிற்சி எடுத்து வருகிறார். இந்த நிலையில் அந்த உடற்பயிற்சி மையத்தின் பயிற்றுவிப்பாளர் மோகன் என்பவர், கௌசிக்கிடம் கட்டுக்கோப்பான உடற்கட்டை (சிக்ஸ்பேக்) 3 மாதத்தில் வரவைப்பதாகவும், இதற்காக தனக்கு ரூ.2 லட்சம் தர வேண்டும் என்றும் கேட்டு உள்ளார். இதனால் கௌசிக் ரூ.2 லட்சத்தை மோகனிடம் கொடுத்தார். பின்னர் பல்வேறு காரணங்களைக் கூறி கௌசிக்கிடம் இருந்து மோகன் மேலும் ரூ.5 லட்சத்தைப் பெற்றதாக தெரிகிறது. ஆனால்
மூன்று மாதங்களாகியும் 'சிக்ஸ்பேக்' வரவில்லை. இந்நிலையில் மோகன் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து மோகன் மீது கௌசிக் போலிசில் புகார் செய்துள்ளார்.
'மகாராஷ்டிர மாநிலத்தவருக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்'
பெங்களூரு: நாட்டில் கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. தினசரி பாதிப்பு 50,000க்கு கீழ் குறைந்துள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் அதிகமாக பரவத்தொடங்கியுள்ளது. இதை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தாவிட்டால் கொரோனா 3வது அலைக்கு வழிவகுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகம் வருபவர்கள் தொற்று இல்லையென சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் வேண்டும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் மீண்டும் கட்டுப்பாடு
புதுடெல்லி: டெல்லியில் சில நாள்களுக்கு முன் தொற்று இரண்டாவது அலை குறைந்து வந்த நிலையில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், தற்போது மீண்டும் தொற்று பரவும் அச்சம் எழுந்துள்ளது. அதன் காரணமாக அங்கு பல பகுதிகளில் பல்பொருள் அங்காடி, ஈரச்சந்தைகள் போன்றவை இயங்குவதற்கு தொற்று பாதுகாப்பு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி லட்சுமி நகரில் உள்ள பல்பொருள் சந்தையில் கட்டுப்பாட்டு விதிமுறைகள் மீறப்பட்டதாக வந்த புகாரையடுத்து அந்தச் சந்தையை ஜூலை 5ஆம் தேதி வரை மூடுவதற்கு டெல்லி மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜூலை 31 வரை அனைத்துலக விமானச் சேவைகள் நிறுத்தம்
புதுடெல்லி: கொரோனா கிருமித்தொற்றின் அச்சம் காரணமாக இந்தியா, பயணிகள் விமானப் போக்குவரத்துச் சேவைக்கான தடையை ஜூலை 31ஆம் தேதி வரை விமானப் போக்குவரத்து அமைச்சு நீட்டித்துள்ளது. அதே நேரத்தில் சரக்கு சேவை விமானங்களுக்கும் சிறப்பு விமானச் சேவைகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி அனைத்துலகப் பயணிகள் விமானச் சேவையை இந்தியா நிறுத்தியது. முன்னதாக ஜூன் 30ஆம் தேதி வரை அந்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

