பெங்களூரு: "மத்திய அரசால் கர்நாடகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டு நிற்காவிட்டால் நமது உரிமைகளைக் காக்க முடியாது.
மாநில அரசுகளின் பிரச்சினைகளை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. மத்திய அரசின் இந்த புறக்கணிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், மாநிலக் கட்சிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி அம்மாநில மக்களைக் கேட்டுக் கொண்டார். மற்ற தென்மாநிலங்களைப் போல் வருகிற 2023ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேசிய கட்சிகளைப் புறக்கணித்து ஜனதா தளம்(எஸ்) கட்சியை ஆதரியுங்கள். டெல்லியில் அமர்ந்து இங்கு ஆட்சி செய்வதை மக்கள் விரும்பக்கூடாது. தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் மாநிலக் கட்சிகளைத்தான் மக்கள் ஆதரிக்கிறார்கள். கர்நாடகத்தை ஆட்சி செய்த காங்கிரஸ், பாஜக ஆட்சிகள் மாநிலப் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை.
அது மொழியாக இருந்தாலும் சரி, நிலமாக இருந்தாலும் சரி, நீர் பிரச்சினையாக இருந்தாலும் சரி.
அனைத்துப் பிரச்சினைகளிலும் கர்நாடகத்தை தேசிய கட்சிகள் அலட்சியப்படுத்தி உள்ளன என்றார் குமாரசாமி.

