புதுடெல்லி: ஜெயகாந்தனின் 'சிலநேரங்களில் சில மனிதர்கள்' உள்ளிட்ட இந்திய மொழிகளில் எழுதப்பட்ட 10 புகழ்பெற்ற நவீன இலக்கிய நூல்களை மொழிபெயர்த்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு (எஸ்.சி.ஓ.) இந்தியா பரிசளித்துள்ளது.
எஸ்.சி.ஓ. அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகியவை உறுப்பு நாடுகளாக இடம்பெற்றுள்ளன.
பெய்ஜிங்கில் உள்ள எஸ்.சி.ஓ. தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், வெவ்வேறு இந்திய மொழிகளில் எழுதப்பட்ட 10 புகழ்பெற்ற நவீன இலக்கிய நூல்களை எஸ்.சி.ஓ., பொதுச் செயலர் விளாடிமீர் நோரோவிடம் சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி வழங்கினார்.
ஜெயகாந்தனின் 'சிலநேரங்களில் சில மனிதர்கள்' (தமிழ்), தாராசங்கர் பந்தோபாத்யாய எழுதிய ஆரோக்ய நிகேதன் (வங்காளம்), ராஜேந்திர சிங் பேடியின் 'ஏக் சதர் மைலி ஸி' (உருது), ரச்சகொண்டா விஸ்வநாத சாஸ்திரியின் 'இல்லு' (தெலுங்கு), எஸ்.எல்.பைரப்பா எழுதிய 'பர்வ' (கன்னடம்) உள்ளிட்ட அசாம், குஜராத்தி, இந்தி மொழிகளில் தலா ஒரு நூல் சீன, ரஷ்ய, ஆங்கில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பரிசளிக்கப்பட்டது.

