புதுடெல்லி: கொவிட்-19 தொற்றின் இரண்டாம் அலை காரணமாக மே மாதம் 13ஆம் தேதி இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாட்டவருக்கு மாலத்தீவு அரசு பயணத் தடை விதித்தது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை குறைந்து வருகிறது. அதனால், மாலத்தீவு மெதுவாக இந்திய நாட்டவர்களுக்குக் கதவுகளை மீண்டும் திறக்கத் தொடங்குகிறது. ஜூலை 15 ஆம் தேதி முதல் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மாலத்தீவுகளுக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்படும் என அதிபர் இப்ராகிம் முகம்மத் சோலிஹ் அறிவித்துள்ளார். பயணம் மேற்கொள்வோர் தங்களுக்கு கொவிட்-19 தொற்றுப் பாதிப்பு இல்லையென சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சுற்றுலாவை நம்பி இருக்கும் மாலத்தீவில் 80 விழுக்காட்டிற்கு மேல் நீர்தான் இருக்கிறது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகளின் தொகுப்பு மாலத்தீவு. அழகழகான கடற்கரைகள், இயற்கைக் காட்சிகள் என சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பல அம்சங்கள் மாலத்தீவில் உள்ளன. மாலத்தீவின் தலைநகரான மேலில் இருக்கும் தேசிய அருங்காட்சியகம், ஹுல் ஹுமாலே தீவு ஆகியவை சுற்றுலாப் பயணிகள் அதிகம் சுற்றிப்பார்க்கும் முக்கிய இடங்கள். மேலில் இருக்கும் வெள்ளி ஜும்மா மசூதி உலகின் பழமையான மசூதிகளில் ஒன்று. மாலத்தீவில் சுற்றுலாத் தலம் எல்லாமே தீவுகளை ஒட்டியவைதான். மாலத்தீவிற்கு கொச்சியில் இருந்து கப்பல் மூலமாகவோ, சென்னையில் இருந்து விமானம் மூலமாகவோ செல்லலாம்.
கப்பல் மூலம் செல்வதற்கு ஒன்றில் இருந்து இரண்டு நாட்கள் ஆகும். விமானம் மூலம் செல்வதற்கு இரண்டு மணிநேரம் ஆகும். இந்திய நாட்டவர்க்கு அங்கு செல்ல விசா தேவையில்லை. பயணம் செய்தாலே அங்கு 90 நாள்களுக்கான விசா வழங்கப்படும். மாலத்தீவுக்கு இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்தே அதிகமானோர் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.
மேலும் உக்ரேன், ஜெர்மனி, கஜகஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்தும் ஏராளமான பயணிகள் வந்துசெல்கின்றனர்.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து அங்கு 400,000க்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை மேற்கொண்டுள்ளனர்.