இந்தியாவின் மருந்து தயாரிப்பு நிறுவனமான ஸைடஸ் கடிலா, மூன்று முறை போடக்கூடிய தனது 'ஸைகோவ்-டி' கொவிட்-19 தடுப்பு மருந்துக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளது.
கொவிட்-19 கிருமிக்கு எதிராக அது 66.6 விழுக்காடு செயல்திறனுடன் செயல்படக்கூடியது என்பது இடைக்கால ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்தால் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட மூன்றாவது தடுப்பூசி என்ற பெருமையை ஸைகோவ்-டி பெறும்.
இந்திய அரசு, 'கொவிஷீல்டு', கோவேக்சின், ஸ்புட்னிக்-வி, மொடர்னா ஆகிய நான்கு கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ளது. இதில், மொடர்னாவைத் தவிர மற்ற மூன்று தடுப்பூசிகளும் பயன்பாட்டில் உள்ளன.
மூன்றாவது கிருமித்தொற்று அலை தவிர்க்க முடியாதது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து தடுப்பூசி ஒன்றே மக்களி உயிர்களைக் காக்கும் ஆயுதமாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் குஜராத்தின் அஹமதாபாத்தைத் தலைமையிடமாக வைத்து செயல்படும் ஸைடஸ் கடிலா மருந்து தயாரிப்பு நிறுவனம், ஸைகோவ்-டி தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது.
அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்று முறை போடக்கூடிய இந்த மருந்து உடலில் ஊசி வாயிலாக செலுத்தப்படாமல் ஸ்பிரிங் மூலம் இயங்கும் ஒரு கருவியைக் கொண்டு நேரடியாக சருமத்திற்குள் செலுத்தப்படும். இதனால் ஊசி போடுவது போன்ற வலி தெரியாது என்று கூறப்படுகிறது.
அறிகுறிகளுடன் கூடிய தொற்று பாதிப்பில் 66.6 விழுக்காடும் மிதமான பாதிப்பில் 100 விழுக்காடும் இந்த மருந்து பலன் அளிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 12 - 18 வயதினருக்கு இந்த மருந்து மிகவும் பாதுகாப்பானது என்று சொல்லப்படுகிறது. இதன் பரிசோதனை தரவுகள் இன்னும் மதிப்பீடு செய்யப்படவில்லை. அண்மையில் 12-18 வயது வரையிலான 1,000 பேர் உட்பட 28,000 தன்னார்வலர்களுக்கு ஸைகோவ்-டி மருந்து அளிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அப்போது மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் மீதான நம்பகத்தன்மை நிரூபிக்கப்பட்டது.
உருமாறிய கிருமி மீதும் இதன் செயல்திறன் சிறப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுதும் தற்போது பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான தடுப்பூசிகள் எம்ஆர்என்ஏ என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டவை.
ஸைகோவ்-டி மருந்து, கொரோனா தொற்றின் மரபணுவிலிருந்து (டிஎன்ஏ) தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது. இந்த மருந்தின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டால் உலகின் முதல் டிஎன்ஏ வகை தடுப்பு மருந்து என்ற பெருமையை இது பெறும்.

