தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாகிஸ்தான் வெடிபொருள்; சீன விமானம்: புதிய தகவல்கள்

1 mins read
de0b023f-7390-46ca-9af4-1b259435dfc7
-

ஸ்ரீநகர்: அண்மையில் ஜம்மு காஷ்மீர் விமானப்படைத் தளத்தின் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் பயன்படுத்திய வெடிபொருள்கள் பாகிஸ்தானில் இருந்து பெறப்பட்டிருக்க வேண்டும் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்ட ஆளில்லா விமானம் (டிரோன்) சீனாவில் தயாரிக்கப்பட்டது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விமானத் தளத்தில் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தும் திட்டத்துடன் தீவிரவாதிகள் செயல்பட்டுள்ளனர். இதற்காக பயன்படுத்தப்பட்ட குண்டுகளில் ஆர்டிஎக்ஸ் வெடிபொருள் அதிகம் உள்ளது. இக்குறிப்பிட்ட வகை பொருள்கள் இந்தியாவில் கிடைப்பதில்லை என்றும் பாகிஸ்தானில் அதிக அளவில் கிடைக்கும் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அண்மைய தாக்குதலில் பெரிய, சிறிய வகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. விமானத் தளத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் சேதப்படுத்துவதும் அதிகமான மனித உயிர் இழப்புகளை ஏற்படுத்துவதும் தான் தீவிரவாதிகளின் நோக்கம் என உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்தியாவின் மீது தீவிரவாதிகள் முதன்முறையாக இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜம்மு காஷ்மீரை அடுத்து கேரளாவிலும் தமிழகத்திலும் இதுபோன்ற தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக உளவு அமைப்புகள் ஏற்கெனவே எச்சரித்துள்ளன.

இந்நிலையில், தாக்குதல் பட்டியலில் கர்நாடக மாநிலமும் இடம்பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதையடுத்து பெங்களூரு உட்பட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆளில்லா சிறிய ரக விமானங்களை சுட்டு வீழ்த்தவும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப கட்டமைப்பை நாடு முழுவதும் உள்ள முக்கிய விமானப்படைத் தளங்களில் நிறுவ வேண்டும் என விமானப்படை மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளது.