ஆற்று நீரில் மூழ்கி 3 சிறுமிகள் பலி
ஹைதராபாத்: 'செல்ஃபி' எடுக்க முயன்றபோது ஆற்று நீரில் மூழ்கி மூன்று சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் தெலுங்கானாவின் தானூரு கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 15 வயதான அஸ்மதா, அஞ்சலி, 13 வயதான ஷாலினி ஆகிய மூவரும் நேற்று முன்தினம், சிங்கன்காவ் ஆற்றில் இறங்கி 'செல்ஃபி' எடுக்க முயன்றுள்ளனர். அப்போது மூவரும் ஆற்றில் தவறி விழுந்தனர். அருகில் யாரும் இல்லாததால் உதவி கேட்டு சிறுமிகள் எழுப்பிய கூக்குரல் யாருக்கும் கேட்கவில்லை. பின்னர் சிறுமிகளை சடலமாகவே மீட்க முடிந்தது.
ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
மும்பை: ஆப்கானிஸ்தானில் இருந்து கொள்கலன்கள் மூலம் கடத்தி வரப்பட்ட 293 கிலோ ஹெராயின் போதைப்பொருளை மகாராஷ்டிரா காவல்துறை பறிமுதல் செய்தது. இதன் அனைத்துலக சந்தை மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி எனத் தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் மும்பை நவசேவா துறைமுகத்துக்கு வந்து சேர்ந்த கொள்கலன்களை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, ஆறு பைகளில் போதைப்பொருள் அடைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கொள்கலன்கள் மூலம் பொருள்களை இறக்குமதி செய்துள்ள ஒருவரிடம் விசாரணை நடந்து வருகிறது. தவிர, சந்தேகத்தின் பேரில் இருவர் கைதாகி உள்ளனர்.
2,600 கிலோ மாம்பழங்களை மோடிக்கு அனுப்பிய ஷேக் ஹசீனா
புதுடெல்லி: இந்தியா உடனான நட்புறவின் அடையாளமாக பிரதமர் மோடிக்கு 2,600 கிலோ எடை கொண்ட மாம்பழங்களை அனுப்பியுள்ளார் பங்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா. லாரி ஒன்றில் மொத்தம் 260 கூடைகளில் அடைக்கப்பட்ட மாம்பழங்கள் ஞாயிற்றுக்கிழமை பங்ளாதேஷ் எல்லையைக் கடந்து சென்றதாக அங்கு வெளியாகும் 'டெய்லி ஸ்டார்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கோல்கத்தாவில் இந்த மாம்பழங்களைப் பெற்றுக் கொண்ட பங்ளாதேஷ் துணைத் தூதா் அவற்றை இந்தியப் பிரதமருக்கு அனுப்பி வைக்க உள்ளார். இதேபோல் திரிபுரா மாநில முதல்வருக்கும் 300 கிலோ மாம்பழங்களை அனுப்பி வைத்துள்ளார் பிரதமர் ஷேக் ஹசீனா.
உச்ச நீதிமன்றம்: அமளிகளை பொறுத்துக்கொள்ள முடியாது
புதுடெல்லி: நாடாளுமன்றத்திலும் மாநில சட்டப்பேரவை களிலும் நிகழும் அமளிகளை பொறுத்துக்கொள்ள இயலாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரள சட்டப்பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது, அவையில் பெரும் அமளி நிகழ்ந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்தபோதே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் கருத்தை தெரிவித்தனர். "அவை உறுப்பினர்கள் அங்குள்ள மைக் உள்ளிட்ட சாதனங்களை தூக்கி எறிவது, பொதுச் சொத்துகளை நாசப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது ஆகியவற்றைப் பொறுத்துக்கொள்ள முடியாது. இந்த விவகாரத்தைக் கடுமையாகக் கையாள வேண்டியுள்ளது," என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
பெட்ரோல் விலை உயர்வு:
மேற்கு வங்கத்தில் போராட்டம்
கோல்கத்தா: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து வரும் 10, 11ஆம் தேதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்கு வங்கத்தில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு விதிகளைப் பின்பற்றி இந்தப் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருந்தார்.
எட்டு மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்: அதிபர் அறிவிப்பு
புதுடெல்லி: எட்டு மாநிலங்களுக்கான புதிய ஆளுநர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மிசோரம், ஹரியானா, திரிபுரா, இமாச்சலப் பிரதேச மாநில ஆளுநர்கள் வேறு மாநிலங்களுக்கு ஆளுநர்களாக மாற்றப்பட்டுள்ளனர். இதையடுத்து கர்நாடகா, மிசோரம், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாநில ஆளுநர்கள் திடீரென மாற்றப்பட்டுள்ளனர்.

