புதுடெல்லி: முன்னாள் இந்திய அமைச்சர் பி. ரங்கராஜன் குமாரமங்கலத்தின் துணைவியார் கிட்டி குமாரமங்கலம், 67, நேற்று முன்தினம் இரவு புதுடெல்லியில் உள்ள அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டார்.
சம்பவ நாளன்று இரவு 9 மணியளவில் இல்லப் பணிப்பெண்ணுடன் தமது வீட்டில் அவர் தனியாக இருந்தார். அப்போது, அவரது சலவையாளாக வேலை செய்த ஆடவர் ஒருவர், மேலும் இருவருடன் சேர்ந்து திருடும் நோக்குடன் அவரது வீட்டினுள் புகுந்ததாக போலிஸ் தெரிவித்தது.
"கதவைத் திறந்த பணிப்பெண்ணை இழுத்துச் சென்று ஓர் அறையில் கட்டிப்போட்டான் அந்தச் சலவையாள். மற்ற இருவரும் திருவாட்டி கிட்டியைத் தாக்கி, தலையணையால் அவரது முகத்தை அழுத்தி, மூச்சைத் திணறடித்து கொலை செய்தனர்," என்று காவல்துறை உதவி ஆணையர் இங்கித் பிரதாப் சிங் விவரித்தார்.
கொலை தொடர்பில் இரவு 11 மணியளவில் போலிசுக்குத் தகவல் கிடைத்ததை அடுத்து, கொலையாளிகளைப் பிடிக்க தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, கொலையில் தொடர்புடைய சலவையாளான ராஜு, 24, கைது செய்யப்பட்டான். மற்ற இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.
திருவாட்டி கிட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். அவரின் கணவர் திரு ரங்கராஜன் குமாரமங்கலம் 1984 பொதுத் தேர்தலில் சேலம் தொகுதியில் இருந்தும் 1998ல் திருச்சி தொகுதியில் இருந்தும் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998ல் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் மின்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற அவர், பதவியில் இருந்தபோதே 2000ஆம் ஆண்டில், தமது 48 வயதில் இரத்தப் புற்றுநோயால் காலமானார்.

