செய்திக்கொத்து

2 mins read
4e9276d4-098f-4692-8219-1eea38a08c97
-

மம்தாவுக்கு ரூ.500,000 அபராதம்

கோல்கத்தா: நீதிமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் விதத்தில் நடந்துகொண்டதாகக் கூறி, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்குக் கோல்கத்தா நீதிமன்றம் ஐந்து லட்ச ரூபாய் அபராதம் விதித்தது. அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார் மம்தா. ஆயினும், அதை எதிர்த்து கோல்கத்தா உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்தார். அவ்வழக்கை நீதிபதி கௌசிக் சந்தா விசாரிக்கவிருந்தார். ஆனால், நீதிபதி சந்தா 2015ல் கூடுதல் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்படுமுன் பாஜகவில் இருந்தவர் என்றும் அதனால் அவர் அவ்வழக்கை விசாரிக்கக்கூடாது என்றும் மம்தா போர்க்கொடி உயர்த்தினார். இதனிடையே, அவ்வழக்கிலிருந்து நீதிபதி சந்தா தாமாகவே விலகிவிட்டார். இருப்பினும், மம்தா நடந்துகொண்ட முறைக்காக நீதிமன்றம் அவருக்கு அபராதம் விதித்துள்ளது.

மன்னிப்பு கேட்டுக்கொண்ட திருடன்

போபால்: உதவி காவல் ஆய்வாளரின் வீட்டிலேயே தங்க, வெள்ளி நகைகளைக் களவாடிச் சென்ற திருடன், அதற்காக மன்னிப்புக் கடிதமும் எழுதி வைத்துவிட்டுச் சென்ற சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலம், பிந்த் நகரில் நிகழ்ந்துள்ளது. "மன்னிக்க வேண்டும் நண்பரே, கட்டாயச் சூழலால் இதைச் செய்ய வேண்டியதாகிவிட்டது. நான் இதைச் செய்யாவிடில், என் நண்பர் உயிரிழக்க நேரிடலாம். கவலைப்படாதீர், எனக்குப் பணம் கிடைத்ததும் திருப்பித் தந்துவிடுகிறேன்," என்று திருடன் தமது கடிதத்தில் எழுதி இருப்பதாகக் கூறப் பட்டது. களவுகொடுத்த காவல் ஆய்வாளரின் குடும்பத்திற்குத் தெரிந்த ஒருவர்க்கு இதில் தொடர்பிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. விசாரணை தொடர்கிறது.

காய்கறி விற்ற பல் மருத்துவர்கள்

ஜம்மு: வேலையின்றித் தவிக்கும் பல் மருத்துவ நிபுணர்கள், ஜம்மு-காஷ்மீர் அரசாங்கம் உடனடியாக ஆட்சேர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தி, சாலையில் நேற்று காய்கறி, பனிக்கூழ் விற்றனர். கடந்த 2008ஆம் ஆண்டு முதல் அரசு மருத்துவமனைகளில் புதிய பல் மருத்துவர்கள் எவரும் பணியமர்த்தப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது. அதற்கு ரூ.40 கோடிக்குமேல் தேவை என அரசாங்கம் கூறி வருகிறது. இந்நிலையில், வேலையில்லாத பல் மருத்துவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராடி வருகின்றனர்.

மேம்பாலம் இடிந்து இருவர் மரணம்

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் காரில் சென்ற இருவர் பலியாகினர்; காரில் இருந்த மேலும் மூவர் காயமடைந்தனர். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஆறுவழித் திட்டத்தின் ஒரு பகுதியாக அந்த மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.