புவனேஸ்வர்: கூலி வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர், திடீரென தனது வேலையை இழக்க நேரிட்டது. என்ன செய்வது என்று தடுமாறிய அவருக்கு, சமூக வலைத்தளங்களில் உணவு தயாரிக்கும் முறை பற்றி பார்த்தது நினைவுக்கு வந்தது. உடனே அந்த வேலையில் இறங்கினார். விளைவு அவருக்கு லட்சக்கணக்கான ரூபாய் வருமானம் கிடைத்தது. இன்னும் கிடைத்துக்கொண்டிருக்கிறது.
ஒடிசா மாநிலம் சம்பல்புர் மாவட்டத்தில் வசித்து வருகிறார் ஐசக் முண்டா என்பவர். கூலித் தொழிலாளியான இவர், கடந்தாண்டு கொவிட்-19 தொற்றுநோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் வருமானம் இழந்து திண்டாடினார்.
அந்த நேரத்தில் சமூக வலைத்தளங்களில், உணவுப் பொருட்கள் தயாரிப்பது குறித்த, 'காணொளி' ஒன்றை பார்த்தார். இதையடுத்து சாப்பிடுவது தொடர்பான காணொளி ஒன்றை யூடியூப்பில் வெளியிட்டார். தட்டில் சோறு, சாம்பார், மிளகாய், தக்காளி வைத்து, அதை எப்படிச் சாப்பிட வேண்டும் என அவர் கூறும் அந்தக் காணொளியை கிட்டத்தட்ட 500,000 பேர் பார்த்துள்ளனர். அதன்பின் உணவு வகைகளைச் சமைப்பது, சாப்பிடுவது தொடர்பாக பல காணொளிகளை 'Isak Munda Eating' என்னும் அவரது 'யூடியூப் சேனல்' வழி வெளியிடத்தொடங்கினார்.
இப்போது யூடியூப்பில் அவரை 741,000 பேர் பின்தொடர்கின்றனர்.
2020 மார்ச்சில் துவங்கிய அவரது இந்த முயற்சிக்கு அவர் எதிர்பார்க்காத அளவில் பணம் கொட்ட ஆரம்பித்துவிட்டது. ஆகஸ்டு மாதத்தில் யூடியூப் நிறுவனத்திடம் இருந்து முதன்முதலில் 500,000 ரூபாய் வந்தது. அந்தத் தொகையை வைத்து கடன்களை அடைத்துவிட்டு சொந்தமாக வீடு கட்டி தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகக் கூறும் ஐசக், "இந்த வேலையை நான் வருமானத்திற்காக மட்டும் செய்யவில்லை. எங்களைப்போன்ற மலைவாழ் மக்கள் என்ன உணவு சாப்பிடுகின்றனர், எப்படிச் சமைக்கின்றனர் போன்றவற்றுடன் எங்கள் வாழ்க்கை முறையை உலகுக்குத் தெரிவிக்கும் வாய்ப்பாகவும் இதை நான் கருதுகிறேன்," என்றார் ஐசக்.