புதுடெல்லி: பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக்கொண்ட திரு ஹர்தீப் சிங் புரி, "உலகம் முழுவதும் எரிசக்தி தொடர்பாக தொழில்நுட்பங்களும் கொள்கைகளும் மாறி வருகின்றன. அதற்கேற்ப இந்தியாவும் எரிசக்தி துறையில் மாற்றங்களைச் செய்ய வேண்டியதற்கான நேரம் வந்துவிட்டது. எரிசக்தி துறையின் மாற்றம் நாட்டுக்கு கவர்ச்சிகரமான வாய்ப்புகளை அளிக்கும். இந்தியா சுயசார்புடையதாக மாற பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையுடன் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க கவனம் செலுத்துவேன்," என்றார்.
"இயற்கை எரிவாயுவை அடிப்படையாகக்கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குவது தொடர்பாகவும் நான் பணியாற்றுவேன். பிரதமர் அறிவித்தவாறு 2030ஆம் ஆண்டிற்குள் நாட்டின் முதன்மை எரிசக்திக் கலவையில் இயற்கை எரிவாயுவின் பங்கை 15 விழுக்காடாக உயர்த்துவேன்.
"கடந்த ஏழாண்டுகளில் எனக்கு முன்பு இந்தப் பணியில் இருந்த திரு தர்மேந்திர பிரதானின் வழிகாட்டுதலின்கீழ் இந்தத் துறையில் ஏராளமான சீர்திருத்தங்களும் முன் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றை முன்னெடுத்துச் செல்வதுடன், பிரதமருக்குத் துணையாக நம் நாட்டு மக்கள் மற்றும் நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்யவும் நான் பாடுபடுவேன்," என்று தெரிவித்தார்.

