லக்னோ: மக்கள் தொகை கட்டுப்பாடு என்ற பெயரில் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது.
அசாம் மாநிலத்தில் ஹிமந்தா பிஸ்வா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்ததும், இதுதொடர்பான மசோதா கொண்டு வரப்பட்டது. இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக்கொண்டால்தான் அரசு வேலையும், அரசு நலத்திட்டமும் கிடைக்கும் என்ற சட்டமுன்வரைவு அம்மாநிலச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், இதேபோல் உத்தரப்பிரதேச மாநிலத்திலும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்குப் புதிய சட்டம் ஒன்றை இயற்ற அம்மாநில அரசு முன்வந்துள்ளது. உ.பி. மாநில சட்ட கமிஷன் அந்தச் சட்டத்திற்கான வரைவு மசோதாவை இணையத்தில் வெளியிட்டுள்ளது.
'உ.பி. மக்கள் தொகை (கட்டுப்பாடு, உறுதிப்படுத்தல் மற்றும் நலன்கள்) சட்டமுன்வரைவு, 2021' என்ற சட்டம் விரைவில் இயற்றப்பட உள்ளது.
இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த மசோதா குறித்து வரும் 10 நாட்களில் மக்கள் கருத்துக்கூறலாம். அதன்பின் ஜூலை 19ஆம் தேதி இந்தச் சட்டம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதைத் தடுப்பதே இச்சட்டத்தின் நோக்கம். இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் அரசின் எந்த நலத்திட்ட உதவிகளும் அரசு வேலைகளும் கிடைக்காது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது.
ஒன்றுக்கு மேற்பட்ட மணம் செய்தால், ஒவ்வொரு தம்பதியினரும் ஒரு தம்பதியராக கணக்கிடப்படுவார்கள், இதன் மூலம், குழந்தைகளின் எண்ணிக்கை கணக்கில் கொள்ளப்படும். புதிய சட்டத்தின்படி, ஒரே குழந்தையோடு கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் கிடைக்கும்.
ஓராண்டு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு, குடிநீர், மின்சாரம், வீட்டு வரி கட்டணத் தளர்வு, இலவச மருத்துவ சிகிச்சை, இலவசக் காப்புறுதி, பள்ளிச் சேர்க்கையில் முன்னுரிமை, பெண் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, கல்வி உதவிநிதி, அரசு வேலை போன்ற சலுகைகள் கிடைக்கும்.
2012ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, உத்தரப்பிரதேசத்தில் 20.43 கோடி பேர் வசிக்கின்றனர். அங்கு மக்கள் தொகை கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டிருப்பதால் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளார் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்.
இந்தச் சட்டம், உ.பி.யில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

