புதுடெல்லி: தேசிய புலனாய்வு அமைப்பு ஜம்மு - காஷ்மீரில் பல இடங்களில் அதிரடிச் சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்தச் சோதனையின்போது பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்கியதன் சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதத்துக்கு நிதியளித்தது குறித்த வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றது. அனந்த்னாக் என்ற பகுதியில் நான்கு இடங்களில் நடைபெற்ற சோதனையிலும், ஸ்ரீநகரில் நடைபெற்ற சோதனையிலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
என்ஐஏ-யின் சோதனை இன்னும் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. மேலும் பலர் கைதாகலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கருதப்படும் 11 அரசு ஊழியர்களை ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியுள்ளது. நீக்கப்பட்ட அரசு ஊழியர்களில் ஹிஸ்புல் முஜாஹிதின் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சலாலுதீனின் மகன்கள் சையது அகமது ஷகீல், ஷாகித் யூசுப் ஆகியோரும் அடங்குவர்.
இவர்கள் அனைவரும் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றனர் என்று யூனியன் பிரதேச நிர்வாகத்திற்குப் புகார்கள் வந்தன. அதனையடுத்து அவர்கள் குறித்து விசாரிக்க அந்த நிர்வாகம் உத்தரவிட்டது. விசாரணையில் போலிஸ், கல்வி, விவசாயம், திறன் மேம்பாடு, மின்சாரம், சுகாதாரம் ஆகிய துறைகளில் பணியாற்றும் 11 ஊழியர்கள், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்படுவது உறுதியானது.

