புதுடெல்லி: பல்வேறு துறைகளில் முன்னேற்றத்துக்கான நல்ல அறிகுறிகள் தென்படுவதால் நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில் பொருளியல் மீட்சி மிக வலுவாக இருக்கும் என மத்திய நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் பொருளியல் மீதான தாக்கம் குறைவாகவே இருக்கும் என்று திரு ராஜீவ் குமார் கணித்திருக்கிறார்.
மூன்றாவது அலையை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் மத்திய அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இரட்டை இலக்கத்தில் இருக்கும் என நம்புகிறேன். இரும்பு, சிமென்ட், சொத்துச் சந்தை போன்ற நுகர்வோரைச் சார்ந்த துறைகள் மீள்வதற்குச் சற்றுக் கூடுதல் காலம் ஆகலாம்.
"ஏனெனில், தொற்றுநோய் காரணமாக நிச்சயமற்ற தன்மை இருப்பதால், நுகர்வோர் சற்று தயங்குகின்றனர். எனவே, தனியார் முதலீடு மீட்பு நடவடிக்கைகளை நடப்பாண்டின் மூன்றாம் காலாண்டில் எதிர்பார்க்கலாம்," என்று ராஜீவ் குமார் கூறியுள்ளார்.
கடந்த மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த 2020-21ஆம் நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளியல் வளர்ச்சி 'மைனஸ்' 7.3 விழுக்காடாக சரிந்தது.
இதனால், நடப்பாண்டின் பொருளியல் வளர்ச்சியிலும் கொரோனா பாதிப்பின் தாக்கம் இருக்கும் என பல ஆய்வு நிறுவனங்கள் கணித்துள்ளன.

