டெல்லியில் தொடர் மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
புதுடெல்லி: இமாச்சலப் பிரதேசத்தில் திடீர் மேக வெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி பல கட்டடங்கள் சேதமடைந்தன.
கங்ரா உள்ளிட்ட சில இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகவும் சிறு பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வட மாநிலங்களில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முன்பே கணித்திருந்தது. அதன்படி, நேற்று அங்கு மேக வெடிப்பு ஏற்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய மழை, 15ஆம் தேதி வரை நீடிக்கும் எனக் குறிப்பிட்டுள்ள வானிலை மையம், மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
சிம்லாவில் ஜாக்ரி நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், டேராடூன் மாவட்டத்தில் பாலம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது.
மணாலி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தர்மசாலாவில் உள்ள மாஞ்சி காட் பகுதியில் இரண்டு கட்டடங்கள் வெள்ளத்தில் சேதமடைந்து சரிந்துள்ளன. பல இடங்களில் கார்களும் இருசக்கர வாகனங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. தர்மசாலா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி மூன்று பேர் பலியாகினர், சேதத்தின் அளவு குறித்து இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் இல்லை. காணாமல் போனவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தலைநகர் டெல்லியிலும் மழை வெளுத்துக் கட்டுகிறது. கடந்த 10ஆம் தேதி, பருவ மழை தொடங்கியது முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்கிறது.
டெல்லி நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்தும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்புக்கு உள்ளானதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.