செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
7b02bc9f-7a8e-4b3f-9a51-e51be7bbac86
-

அடக்குமுறையை கைவிட வேண்டும் என்கிறார் மெகபூபா முஃப்தி

ஸ்ரீநகர்: ஜம்மு, காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைந்து இருப்பதையே விரும்புவதாக அதன் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். எனவே அம்மக்கள் மீதான அடக்குமுறை திட்டங்களையும் நடவடிக்கைகளையும் மத்திய அரசு கைவிட வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார். "ஜம்மு, காஷ்மீர் பொருளாதார ரீதியாக பின்னடைந்துள்ளதாக ஆளும் மத்திய அரசு குற்றம் சாட்டுகிறது. ஆனால் இங்கு பொருளாதார சீற்றமும் வேலையில்லாத் திண்டாட்டமும் ஏற்படவில்லை. முந்தைய ஆட்சியிலிருந்து பொருளாதார தாக்கம் ஏற்பட்டிருந்தால், ஜம்மு-காஷ்மீர் இன்றைய சூழலில் குஜராத்தை விட மோசமான நிலையை அடைந்திருக்கும்," என்று மெகபூபா முஃப்தி மேலும் கூறியுள்ளார்.

மேகதாது: தமிழக அரசு குழப்பத்தை ஏற்படுத்துவதாக கர்நாடகா புகார்

பெங்களூரு: மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாக அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். அணை விவகாரம் தொடர்பில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாக அவர் மீண்டும் சாடியுள்ளார். "கர்நாடகாவின் கோரிக்கையை மத்திய அரசு சட்ட ரீதியாக பரிசீலிக்கும். பிரச்சினைகளை காவிரி தீர்ப்பாயம் தீர்த்து வைத்ததால் மேகதாது அணையை நிறுத்த வேறு எந்த காரணமும் இல்லை" என்றார் அமைச்சர் பசவராஜ். மேகதாது அணை கட்டுமானப் பணியை நிறுத்தும் பேச்சுக்கே இடம் இல்லை என்றும் அவர் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மே மாதம் தொழில் உற்பத்தி

29 விழுக்காடு உயர்வு

புதுடெல்லி: கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் கடந்த மே மாதம் இந்தியாவில் தொழில் உற்பத்தி 29 விழுக்காடு உயர்ந்துள்ளது. உற்பத்தித் துறை, சுரங்கம், மின்சாரத் துறைகளின் உற்பத்தி சிறப்பாக இருந்ததால், இந்த வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது. கடந்த மே மாதம், நாட்டின் தொழில் உற்பத்தி குறியீட்டு எண் 116.6 புள்ளிகளாக இருந்தது என்றும் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்தக் குறியீட்டு எண் 90.2 புள்ளிகளாக இருந்தது என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் 2019ஆம் ஆண்டு மே மாதம் இருந்த 135.4 புள்ளிகளுடன் ஒப்பிடுகையில், இது குறைவாகும்.

செப்டம்பர் 12ல் நீட் நுழைவுத் தேர்வு

புதுடெல்லி: மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இன்று மாலை 5 மணி முதல் தேசிய தேர்வு முகமை (NTA) இணையத்தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு 198 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மிளகாய்ப்பொடி தூவி தப்பிய கைதிகள்

இடாநகர்: சிறைக்காவலர்கள் மீது மிளகாய்ப் பொடி தூவிவிட்டு தப்பிச் சென்ற ஏழு கைதிகளுக்கு அருணாசலப் பிரதேச காவல்துறை வலைவீசியுள்ளது. கிழக்கு சியாங் மாவட்டத்தில் உள்ள பசிகாட் சிறைச்சாலையில் இருந்து ஏழு கைதிகள் தப்பிச் செல்ல திட்டமிட்டனர். இதையடுத்து நேற்று முன்தினம் பணியில் இருந்த காவலர்கள் மீது திட்டமிட்டு மிளகாய்ப் பொடி, உப்பு ஆகியவற்றைத் தூவினர். இதில் சிறைக்காவலர்கள் நிலைகுலைய, அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஏழு பேரும் தப்பிச் சென்றதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.