கொரோனாவுடன் டெங்கியும் ஸிக்கா கிருமித்தொற்றும் மக்களை அச்சுறுத்தி வருகிறது
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொரோனா கிருமித்தொற்றின் அலையைக் கட்டுப்படுத்துவதற்குத் திணறி வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கை 14,000ஐத் தாண்டி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
கேரளாவில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 14,539 பேர் புதிதாகத் தொற்றால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 10,331 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். 115,174 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 3,087,673 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 14,810 பேர் தொற்றுக்குப் பலியாகிவிட்டனர். அத்துடன் அங்கு ஸிக்கா கிருமித்தொற்றும் டெங்கிக் காய்ச்சலும் மக்களை அச்சுறுத்தி வருவதால் அம்மாநிலத்தின் முதல் அமைச்சர் பினராயி விஜயன், வரும் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களிலும் முழு ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துள்ளார்.
வார நாட்களில் வங்கிகளும் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடைகள் இரவு 8 மணி வரை திறந்திருக்கலாம். தொற்று அதிகம் உள்ள பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட மண்டலமாக அறிவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அப்பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படும்.
ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தேவையின்றி தங்கள் வீடுகளை விட்டு வெளியில் செல்லக்கூடாது என்றும் முக்கியத் தேவைகளுக்கு வெளியில் செல்லும்போது பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்தே செல்ல வேண்டும் என்றும் மாநில அரசு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில், முழு ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், எனவே கடைகளைத் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் கேரள வியாபாரிகள் முதல்வரிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இது குறித்து முதல் அமைச்சர் பினராயி விஜயன் கூறியதாவது:
"கடைகளையும் வர்த்தக நிறுவனங்களையும் திறந்துவிட வேண்டும் என்றே அனைவரும் விருப்பப்படுகிறோம். ஆனால், அதற்கான நேரம் இதுவல்ல. எனவே, வியாபாரிகளும் பொதுமக்களும் பொறுமை காப்பதால் மட்டுமே நாம் கொரோனா கிருமியிடம் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும். கிருமித்தொற்று ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்ட பின், படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படும்," என்று கூறினார்.
இந்நிலையில் கடந்த 12 நாட்களில் மட்டும் இந்தப் பகுதிகளில் 288 பேருக்கு டெங்கிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 1,037 பேருக்கு டெங்கி சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்களில் 288 பேருக்கு டெங்கி பாதிப்பு பதிவாகியுள்ளது. காசர்கோடு, கோழிக்கோடு மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான டெங்கிக் காய்ச்சல் பதிவாகியுள்ளது. ஸிக்கா கிருமியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

