செய்திக்கொத்து

2 mins read
1cb6b396-eb7b-4d77-826d-f36a48ee68be
-

மேகதாது அணை குறித்து 4 மாநில

முதல்வர்களுடன் ஆலோசனை

புதுடெல்லி: மேகதாது அணை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை குறித்து நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் முதல்வர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தவிருப்பதாக கூறப்படுகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என கர்நாடகா கூறிவருவதையடுத்து இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

வரதட்சணையை எதிர்த்து கேரள ஆளுநர் ஆரிஃப் உண்ணாவிரதம்

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாக வரதட்சணை கொடுமை அதிகரித்து வருவதாகவும் வரதட்சணை கொடுமை காரணமாக மரணங்கள் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் வரதட்சணைக் கொடுமைக்கு எதிராகவும், பெண்கள் பாதுகாப்புக்காகவும் கேரளாவில் காந்திய அமைப்புகள் சார்பில் நேற்று மாலை 4.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. வரதட்சணைக்கு எதிரான இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு காந்திய அமைப்புகளிடம் இருந்து வந்த அழைப்பை ஏற்று கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பங்கேற்றார்.

இந்தியாவில் தயாராகிறது ரஷ்யாவின் ஸ்புட்னிக் 'வி' தடுப்பூசி

புதுடெல்லி: ரஷ்யாவின் ஸ்புட்னிக் 'வி' தடுப்பு மருந்து வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்தியாவில் தயாராகவுள்ளது. இதற்கான அனுமதியை சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது. இத்தகவலை ரஷ்யாவின் 'ஆர்டிஐஎஃப்' (Russian Direct Investment Fund) நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதனையடுத்து இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து ஆண்டுக்கு 30 கோடி தடுப்பூசிகளை 'சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா' நிறுவனம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் உள்ள தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தகுதிபெற்ற அனைவருக்குமே தடுப்பூசி செலுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ள நிலையில், சீரம் நிறுவனம் ஸ்புட்னிக் 'வி' தடுப்பூசி தயாரிக்க அனுமதி பெற்றிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் நாள்தோறும் 16 முதல் 18 கோடி தடுப்பூசி மருந்து உற்பத்தியாகும். அதன் பின்னர் செப்டம்பரில் இருந்து அன்றாடம் 30 கோடி தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்யப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் தேசிய தடுப்பூசித் திட்டத்தின் நிபுணர் குழுவின் தலைவர் மருத்துவர் என்.கே.அரோரா.