லக்னோ: அல்காய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மேலும் மூன்று பயங்கரவாதிகளை உத்தரப்பிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அம்மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள வாசிர்கஞ்ச் பகுதியில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் போது மூவரும் போலிசாரிடம் சிக்கினர்.
எதிர்வரும் இந்திய சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பயங்கரவாதிகள் நாச வேலைகளை அரங்கேற்ற திட்டமிட்டிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
இதையடுத்து, கடந்த 11ஆம் தேதி பயங்கரவாத தடுப்புப் படையினர் அல் காய்தா ஆதரவு பயங்கரவாதிகள் இருவரை லக்னோவில் கைது செய்தனர். விசாரணையில், இருவரும் மனித வெடிகுண்டுகளாக மாறி, அம்மாநிலத்தில் பெரும் உயிருடற் சேதங்களை ஏற்படுத்த சதித்திட்டம் தீட்டியிருந்தது தெரிய வந்தது.
இந்த இருவருடன் தொடர்புடைய மேலும் பலருக்கு போலிசார் வலைவீசி இருந்தனர்.
இந்நிலையில், லக்னோவில் நேற்று முன்தினம் மேற்கொண்ட மற்றொரு நடவடிக்கையின் போது மேலும் மூன்று பயங்கரவாதிகள் பிடிபட்டுள்ளனர்.
இவர்கள் அல் காய்தா ஆதரவுடன் இயங்கும் ஓர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும், உத்தரப் பிரதேச மாநிலத்தி்ல பல்வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்களை நிகழ்த்த திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் போலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

