செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
38a67561-e01a-4394-99d9-cb05904ea7b3
-

அதிபர் தேர்தல்: சரத் பவார் களம் இறங்கவில்லை என கட்சி விளக்கம்

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள இந்திய அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக வெளியான தகவல் ஆதாரமற்றது என அக்கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தங்கள் கட்சி அளவில் எந்தவிதப் பேச்சும் நடைபெறவில்லை என்றும் பிற கட்சிகளுடனும் இது குறித்து பேசப்படவில்லை என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நவாப் மாலிக் கூறியுள்ளார். இது முற்றிலும் ஆதாரமற்ற தகவல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, அதிபர் தேர்தலில் களமிறங்கும் எண்ணம் தமக்கு இல்லை என சரத் பவார் தெரிவித்திருந்தார்.

வாத நோயால் 700,000 பேர் பலி

புதுடெல்லி: இந்தியாவில் பக்கவாத நோயால் ஆண்டுதோறும் 700,000 பேர் உயிரிழப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 1990 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வாதம், தலைவலி பிரச்சினை, வலிப்பு உள்ளிட்ட காரணங்களால் பலியாவோர் எண்ணிக்கை நான்கு முதல் 8.2 விழுக்காடு அளவுக்கு அதிகரித்துள்ளது. நரம்பியல் கோளாறுகளால் பலியாவோரில் 68 விழுக்காட்டினர் பக்கவாதத்தால் பலியாவதும் இந்த ஆய்வின் வழி தெரிய வந்துள்ளது.

இந்தியாவுடனான உறவுக்கு வானமே எல்லை என்கிறார் ரஷ்ய தூதர்

புதுடெல்லி: ரஷ்யாவால் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள 'ஸ்புட்னிக் லைட்' கொரோனா தடுப்பூசி மிக விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிகோலே குடாசேவ் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையேயான உறவுக்கும் ஒத்துழைப்புக்கும் வானமே எல்லையாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா - ரஷ்யா இடையே நடைபெற உள்ள உச்ச மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து இருதரப்பு அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் நடப்பாண்டு நடைபெற உள்ள மாநாடு, இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் மிக முக்கிய அத்தியாயமாக இருக்கும் என்று இருதரப்பும் நம்புவதாகவும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

'ஸிக்கா': 28 பேருக்கு பாதிப்பு

திருவனந்தபுரம்: 'ஸிக்கா' கிருமியால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை கேரளாவில் 28 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே 23 பேருக்கு 'ஸிக்கா' தொற்று இருப்பது உறுதியான நிலையில், அனயரா பகுதியைச் சேர்ந்த இருவருக்கும், குன்னுகுழி, பட்டம், கிழக்கே கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தலா ஒருவருக்கும் பாதிப்பு இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது.