மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரான மும்பையில் நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்றுக் காலை வரை தொடர்ச்சியாகக் கனமழை பெய்தது. அதன் காரணமாக அந்நகரின் முக்கிய சாலைகளில் பெரும்பாலும் வெள்ளத்தால் சூழப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் நேற்று காலை 8.30 மணிக்கு முந்தைய 24 மணி நேர நிலவரப்படி 64.45 மி.மீ. மழையும் மும்பையின் கிழக்குப் புறநகர்ப் பகுதியில் 120.67 மி.மீ. மழையும், மேற்குப் புறநகர்ப் பகுதிகளில் ஆக அதிகமாக 127.16 மி.மீ. மழை பொழிவும் பதிவாகியுள்ளது என மும்பை வானிலை நிலையம் தெரிவித்தது.
காட்கோபர், சயான், குர்லா, பரேல், நவி மும்பை உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பல சாலைகளில் மக்கள் இடுப்பளவு தண்ணீரில் நடந்துசெல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மும்பையின் புறநகர்ப்பகுதிகளில் உள்ள பல தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
மும்பையில் மிகவும் பிரபலமான காந்தி மார்க்கெட் பகுதி வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஹிண்ட்மாதா சந்திப்பு மற்றும் டாஹிசர் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேக்கத்தால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பையிலும் அதன் புறநகர்ப்பகுதிகளிலும் தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என்றும் அந்த மழை இரண்டு முதல் மூன்று மணி நேரம் நீடிக்கும் என்றும் மும்பை வானிலை நிலையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு, தானே நகருக்கு அருகேயுள்ள கோப்பரியில் 20 டன் எடையுள்ள தக்காளி மூட்டைகளை ஏற்றி வந்த கனரக வாகனம் ஒன்று விரைவுச்சாலையில் தடம்புரண்டு தலைகுப்புற விழுந்தது. இந்தச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
மத்திய பிரதேசம், இமாச்சலப்பிரதேசம் குஜராத், அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது.
டெல்லியில் அடுத்த மூன்று நாட்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

