பெங்களூரு: பெங்களூருவில் வசித்து வரும் சமூக ஆர்வலரான ஆபிரகாம் என்பவர் ஊழல் தடுப்பு படையில் ஒரு புகார் அளித்து உள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டு இருந்ததாவது:-
கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவராக இருந்த சுதீந்திரா ராவ், தன்னை அந்த பணிக்கு நியமனம் செய்ய ரூ.9¾ கோடி லஞ்சம் கொடுத்ததாக கன்னட தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி கொடுத்து உள்ளார்.
இதுதவிர கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள், ஊழியர்கள் நியமனம் உள்ளிட்ட பல பணிகளுக்கு ரூ.60 கோடி வரை லஞ்சம் வாங்கப்பட்டு உள்ளது.
இதில் முதல் அமைச்சர் எடியூரப்பா, பெங்களூரு நகர மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரும், எடியூரப்பாவின் உறவினருமான மரியசாமி, எடியூரப்பாவின் மகனும், கர்நாடக பாரதிய ஜனதா கட்சித் துணைத் தலைவருமான விஜயேந்திரா, எடியூரப்பாவின் பேரன் சசிதர் மரடி, எடியூரப்பாவின் மருமகன் சஞ்சய்ஸ்ரீ, மகள் பத்மாவதி விருபாக்சப்பா ஆகியோருக்கும் தொடர்பு உள்ளது. லஞ்சம் கொடுத்தார் என்பதற்காக, எந்தத் தகுதியும் இல்லாத சுதீந்திரா ராவை, எடியூரப்பா கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமித்து உள்ளார். இவர்கள் 6 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது.

