போபால்: கிணற்றுக்குள் விழுந்த சிறுவனைக் காப்பாற்ற திரண்ட ஏராளமானோர் ஒட்டுமொத்தமாக கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
கஞ்ச்பசோதா என்ற கிராமத்தில், பாழடைந்த கிணற்றில் விழுந்த ஒரு சிறுவனைக் காப்பாற்ற கிணற்றின் அருகே திரண்டு வந்து கிணற்றை எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தபோது, அதன் சுற்றுச்சுவர் இடிந்து அங்கிருந்தவர்களில் 20க்கு மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்து விட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்ததும் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன.
கிணற்றில் இருந்து காயம் அடைந்த நிலையில் நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 14 பேர் மீட்கப்பட்டனர் என்றும் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு நிகழ்ந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன. மருத்துவக் கல்வித்துறைக்கான அமைச்சர் விஷ்வாஸ் சாராங் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்புப்பணியைப் பார்வையிட்டார்.

