குஜராத்தில் புதுப்பிக்கப்பட்ட
மாபெரும் ரயில் நிலையம் திறப்பு
காந்தி நகர்: இந்தியாவின் முதல் மறுசீரமைக்கப்பட்ட மாபெரும் சொகுசு ரயில்நிலையத்தை நேற்று பிரதமர் இணையம் வழி திறந்துவைத்தார். குஜராத் மாநிலத்தின் காந்தி நகரில் உள்ள இந்த ரயில் நிலையம், சுற்றுலாப்பயணிகள் வசதியுடன் தங்கி சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஏதுவாக ஆடம்பர விடுதி, வழிபாட்டுக்கூடம் உள்ளிட்ட பல வசதிகளுடன் கடைத்தொகுதிகளையும் உள்ளடக்கி நவீனமயமாக மறுசீரமைப்புப் பெற்றுள்ளது.
கேரளா: விஷவாயு தாக்கி 4 பேர் பலி
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் கொல்லம் அருகே உள்ள குந்தரா பெரும் புழா பகுதியில் ஒரு வீட்டில் சுமார் 100 அடி ஆழக் கிணற்றில் தூர்வாரும்போது விஷவாயு தாக்கி நான்கு தொழிலாளர்கள் பலியானார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இருந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்டனர்.
'மராட்டியத்தில் கூடுதல் தளர்வுகள்'
மும்பை: கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் மே மாதத்திற்குப் பிறகு தொற்று பாதிப்பு குறையத்தொடங்கியுள்ளது. பண்டிகை காலம் நெருங்குவதால் கடைகளை கூடுதல் நேரம் திறக்க அரசு தளர்வுகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல பாதிப்பு கட்டுக்குள் இருப்பதால் அங்கு மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் 3-வது அலை அச்சத்தால் மின்சார ரயில்களில் பொது மக்களை அனுமதிக்க தற்போது வாய்ப்பு இல்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

